Published : 15 May 2022 06:22 AM
Last Updated : 15 May 2022 06:22 AM

டான் திரை விமர்சனம்

மிதிவண்டியில் அலைந்து திரிந்து பிளாஸ்டிக் பொருட்களை விற்கும் ஓர் எளிய குடும்பத்தின் அப்பா (சமுத்திரக்கனி), தனது ஒரே மகனை (சிவகார்த்திகேயன்) இன்ஜினீயர் ஆக்கிப் பார்க்க ஆசைப்படுகிறார். அதற்காக, சிறுவயது முதலே அவனை கண்டிப்புடன் வளர்க்கிறார். மகனோ தனக்கு பிடித்ததை செய்ய நினைக்கிறான். பள்ளியில் காதல், கல்லூரியில் சேட்டைகள் என வலம் வரும் அவன், இறுதியில் அப்பா விரும்பியதை நிறைவேற்றினானா, அல்லது தனக்கான வழியைக் கண்டுகொண்டு அதில் நடந்தானா என்பது கதை.

பல படங்களில் எடுத்தாளப்பட்ட கதைதான். ஆனால், அதை, அனைவருக்கும் பிடித்தமான திரைக்கதையாக மாற்றியதில் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி ‘சிக்ஸர்’ அடிக்கிறார்.

பள்ளிக் காதலில் நிறைந்திருக்கும் விடலைத்தனம், அது கல்லூரியில் தொடரும்போது கூடியிருக்கும் முதிர்ச்சி, பெற்றோரை ஏமாற்றும் பிள்ளைகள் ஒருநாள் பிடிபடுவது, அம்மாவை இழந்த பிள்ளைகளுக்கு தந்தையே தாயுமானவனாக இருப்பது, பிள்ளைகளுக்காக எந்த சுமையையும் ஏற்கத் துணியும் அப்பாக்கள், ஆசிரியர்களின் மன்னிப்பில் உருப்பெற்று எழும் மாணவர்கள், தன்னைக் கண்டறியும்போது அதில் நம்பிக்கையுடன் உறுதியாக நிற்கும் இளைய தலைமுறை என போலித்தனமில்லாத உணர்வுகளைக் கொட்டி கதாபாத்திரங்களை எழுதி, அழுத்தமான சம்பவங்களை திரைக்கதையில் வைத்து, கச்சிதமாக படத்தை கொடுத்துள்ளனர்.

பள்ளி மாணவன், கல்லூரி மாணவன், முதிர்ச்சியான இளைஞன் என மூன்றுவிதமான தோற்றங்களில் கச்சிதமாகப் பொருந்தி, மூன்றுவிதமான நடிப்பை தனக்கே உரிய பாணியில் கொடுத்து அசத்துகிறார் சிவகார்த்திகேயன். குறிப்பாக, கல்லூரியின் துணை முதல்வரிடம் மன்னிப்பு கேட்கும் காட்சியில், அப்பாவின் இரு பாதங்களையும் பார்த்துவிட்டு அலறுகிற காட்சியில் சிவகார்த்திகேயனின் நடிப்பு உயரம் தொடுகிறது.

ப்ரியங்கா அருள் மோகன் அதிக முக்கியத்துவத்துடன் படத்தில் கடைசிவரை இடம்பெறுகிறார். இவரது போலீஸ் அப்பா கதாபாத்திரத்தில் வருபவர் அவ்வளவு இயல்பு. மகனது உயர் கல்விக்காக ஏங்கும் முரட்டு அப்பாவாக, ஆனால் மனதளவில் அனைத்து அப்பாக்களின் பிரதிபிம்பமாக வந்து நெகிழ வைக்கிறார் சமுத்திரக்கனி. ‘மாநாடு’ படத்தில் சிம்புவுடன் ஆடிய விளையாட்டை, இதில் சிவகார்த்திகேயனுடன் அடித்து ஆடி விளாசுகிறார் எஸ்.ஜே.சூர்யா.

சூரியும், சிவகார்த்திகேயனும் சீன மொழி உச்சரிப்பில் தமிழ் பேசும்போது திரையரங்கு அல்லோலப்படுகிறது. ராதாரவி, ராம்தாஸ், காளி வெங்கட், பால சரவணன், ஷிவாங்கி, மிர்ச்சி விஜய் ஆகியோரின் நகைச்சுவைப் பங்களிப்பு, கல்லூரிக் காட்சிகளுக்கு ஊக்கம் அளிக்கிறது.

முதல் பாதி படத்துக்கு ஒரு கொண்டாட்டம் போலவும், இரண்டாம் பாதிக்கு உணர்வுக் கலவையாகவும் பின்னணி இசை, பாடல்களை வழங்குகிறார் அனிருத். கே.எம்.பாஸ்கரனின் ஒளிப்பதிவு, பள்ளி, கல்லூரியை வண்ணமயமாகவும் சென்டிமென்ட் காட்சிகளை எதார்த்தமாகவும் பதிவு செய்துள்ளது.

தன்னிடம் இருக்கும் தனித் திறமையைக் கண்டறிந்து அதில் சாதித்துக் காட்டுபவனே ‘டான்’ என்று புதிய அர்த்தம் கொடுக்கும் படத்தின் கதை பழகிய ஒன்றாக இருந்தாலும், அதை காதல், நகைச்சுவை, ஆக்‌ஷன், சென்டிமென்ட் என ‘ஆல் கிளாஸ்’ படமாக கொடுத்த வகையில் இந்த ‘டானு’க்கு வெல்டன் சொல்லலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x