'முன்னெப்போதும் இல்லாதபடி நீ என்னை மாற்றியிருக்கிறாய்' - தாய்மை குறித்து நடிகை நமீதா
நடிகை நமீதா தனது பிறந்தநாளையொட்டி, ரசிகர்களுக்கு தான் தாயாகப்போகும் தகவலை தெரிவித்துள்ளார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான 'எங்கள் அண்ணா' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை நமீதா. தான் நடித்த முதல் படத்திலேயே ரசிகர்கள் பலரது கவனத்தை ஈர்த்தார். அஜித்தின் 'பில்லா', விஜய்யின் 'அழகிய தமிழ் மகன்' உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவரானார்.
பின்னர், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார். தொடர்ந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அதிலிருந்து வெளியில் வந்ததும் தனது காதலர் வீரேந்திர சவுத்ரி என்பவரை மணந்துகொண்டார்.
2017-ம் ஆண்டு நமீதா - வீரேந்திர சவுத்ரி திருமணம் நடந்தது. 5 ஆண்டுகள் கழித்து தற்போது, நமீதா தான் கர்ப்பமாக இருப்பதை அவரது பிறந்த நாளான இன்று ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார். இந்த தகவலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களோடு பகிர்ந்திருக்கிறார் நமீதா. 41 வயதில் தாயாக இருக்கும் நமீதா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ''தாய்மை...! வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும்போது, நான் மாறினேன்; என்னுள் மென்மையான மாற்றம் நிகழ்ந்துள்ளது.
பிரகாசமான சூரிய ஒளி என் மீது பிரகாசிக்கும்போது, புதிய வாழ்க்கை, புதிய தொடக்கம் என்னை அழைக்கிறது. இதற்காகத்தான் என் வாழ்வில் இத்தனை நாட்கள் பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன். குழந்தையின் மென்மையான உதைகள் மற்றும் படபடப்புகள் இவை அனைத்தையும் என்னால் உணர முடிகிறது, முன்னெப்போதும் இல்லாதபடி நீ என்னை மாற்றி இருக்கிறாய்' என பதிவிட்டுள்ளார். பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
