ஜெய்பீம் பட விவகாரம்: வழக்குப்பதிவு செய்ய உத்தரவு

ஜெய்பீம் பட விவகாரம்: வழக்குப்பதிவு செய்ய உத்தரவு
Updated on
1 min read

சென்னை: சாதி மதக்கலவரத்தை தூண்டும் வகையில் ஜெய்பீம் படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா ஆகியோருக்கு எதிரான புகாரில் வழக்குப் பதிவு செய்ய வேளச்சேரி காவல் ஆய்வாளருக்கு சென்னை சைதாபேட்டை நீதிமன்றம் உத்தரவிடுள்ளது.

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் நாயகர் தாக்கல் செய்த மனுவில், ‘‘நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் படத்தில், தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும், தேசப் பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலும், சாதி மதக் கலவரத்தை உருவாக்கும் வகையிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.மேலும், இந்து வன்னியர் சமூகமக்களின் மனதை புண்படுத்தும் வகையில், அவர்களை இழிவுபடுத்தியும், பிறமக்களின் மனதில் வெறுப்பை உருவாக்கும் வகையிலும் அவர்கள் வழிபடும் அக்கினி குண்டம், மகாலட்சுமி, வன்னியர்கள் வணங்கும் குருவின் பெயரை இழிவுபடுத்தி காட்சிகள்அமைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு மதமாற்ற நிறுவனங்கள் கொடுத்த பணத்தை நன்கொடை என்ற பெயரில் பெற்று, அகரம் அறக்கட்டளை பணத்தை கையாடல் செய்து அந்த பணத்தில் ஜெய்பீம் படத்தை எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு விளம்பர செலவாக ஒரு கோடி ரூபாய் காட்டி கிறிஸ்தவ மதமாற்ற நிறுவனங்களுக்கு கொடுத்து அந்நிய செலவணி குற்றம் செய்யப்பட்டுள்ளது. அகரம் அறக்கட்டளையின் நோக்கங்களுக்கு எதிராகவும் குற்றங்கள் செய்திருப்பது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும்.

இதுகுறித்து, தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல், கலை இயக்குனர், மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், கவசம் கிளாரட் சபை ரபேல்ராஜ் உள்ளிட்டோர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி வேளச்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். அந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 8-இல் அளித்த புகார் மீது வழக்குப் பதிவு செய்து, முதல் தகவல் அறிக்கையை மே 20-இல் அதை தாக்கல் செய்ய வேண்டும் என்று வேளச்சேரி காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in