

இந்தியாவின் முதல் முழு நீள மவுனப் படமான ‘ராஜா ஹரிஷ்சந்திரா’ வெளியான நாள் இன்று. இந்தியாவின் திரைப்படத் தந்தையாகப் போற்றப்படும் ஆளுமையான தாதாசாஹேப் பால்கே, 1913-ல் இயக்கிய மவுனப் படமாகும் இது.
இந்தப் படம் இந்தியப் புராண இதிகாச நாயகனான ஹரிச்சந்திர ராஜாவின் கதை இது. பால்கே சிறுவயது முதலே கலையில் ஈடுபாட்டுடன் இருந்துள்ளார். இவர் சமஸ்கிருதப் பண்டிதராகவும் இருந்துள்ளார். 1885-ல் ஜே.ஜே. ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் கல்லூரியில் இணைந்து ஓவியம் பயின்றுள்ளார். பால்கேவுக்கு ஓவியர் ராஜா ரவிவர்மாவின் ஓவியத்தின் மீது மிகுந்த ஈடுபாடு இருந்துள்ளது. எண்ணெய் ஓவியம், நீர்வண்ண ஓவியம் ஆகியவற்றையும் பின்னாளில் பால்கே கற்றுத் தேர்ந்துள்ளார். 1890-ல் ஒளிப்படக் கருவி ஒன்றை வாங்கி அந்தக் கலையையும் ஆர்வத்துடன் பயின்றுள்ளார். இடையில் ஓவியக் கலைக்கூடம் வைத்திருந்தார். பிறகு 1910-ல் ‘த லைஃப் ஆஃப் கிறிஸ்ட்’ என்னும் படத்தை பாம்பையில் பார்த்தார். ஓவியனாக அந்தப் படத்தின் காட்சிகள் பால்கேவுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. படத்தின் ஒவ்வொரு சட்டகத்தையும் ஓர் ஓவியமாகப் பார்த்த அவர் தன் ஓவியத்தையும் இப்படி நகரும் கலையாக்க வேண்டும் என்ற ஆசை அவருக்குள் பிறந்தது. ஏற்கெனவே அவருக்கு ராஜா ரவிவர்மனின் இந்து புராணக் கதாபாத்திர ஓவியங்கள் மீது பெரும் ஈடுபாடு இருந்தது. இங்கிலாந்து சென்று சினிமாக் கலையை சிசில் ஹெப்வொர்த் என்னும் இயக்குநரிடம் பயின்றுள்ளார். இந்தியா திரும்பி அவர் தன் சொந்தத் தயாரிப்பில் இயக்கி எடுத்த படம்தான் இது.
இந்தப் படம் தயாரிப்புக்கு முன்பு பால்கே ஒரு குறும்படத்தை இயக்கியிருந்தார். அதைக் காண்பித்துத்தான் இந்த முழுநீளப் படத்துக்கான நிதியைத் திரட்டினார். இந்தப் படத்தில் நடிக்கப் பெண்கள் யாரும் முன்வரவில்லை. அதனால், ஆண் நடிகர்களே பெண் பாத்திரங்களை ஏற்று நடித்தனர். 40 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தின் திரைக்கதை, தயாரிப்பு வடிவமைப்பு, படத் தொகுப்பு, ஒப்பனை, இயக்கம் உள்ளிட்ட பல பொறுப்புகளை பால்கேவே ஏற்றார். ஒளிப்பதிவு மட்டும் த்ரிம்பாக் பி தெலாங்கு என்பவர் செய்தார். இந்தப் படம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. இந்தியத் திரை வரலாற்றுக்குச் சரித்திரமும் குறித்தது.