Published : 29 Apr 2022 06:34 AM
Last Updated : 29 Apr 2022 06:34 AM
பெங்களூரு:கேஜிஎப் 2 திரைப்படத்தின் வெற்றி குறித்து கன்னட நடிகர் சுதீப் கூறும்போது, “கன்னட படத்தை இந்தியா முழுவதுக்குமான படமாக எடுக்கப்பட்டதாக கூறுகிறார்கள். அவ்வாறு சொல்ல கூடாது.இந்தி நமது தேசிய மொழி இல்லை. பாலிவுட்டில் எடுக்கப்படும் படங்கள் தெலுங்கு, தமிழில் வெளியிடப்படுகின்றன. அவை வெற்றி பெறுவதற்காக போராடுகின்றன. ஆனால் கன்னடத்தில் தயாரிக்கப்படும் படம் எல்லா இடத்திலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது” என்றார்.
இதற்கு பாலிவுட் நடிகர் அஜய்தேவ்கன் தன் ட்விட்டர் பக்கத்தில், “இந்தி தேசிய மொழி இல்லை என்றால், ஏன் உங்கள் தாய்மொழி படங்களை இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள்? இந்தி தான் எப்போதும் நமது தாய்மொழியாகவும் தேசிய மொழியாகவும் இருக்கும்” என்று இந்தியில் பதிவிட்டார்.
அதற்கு சுதீப், “நாங்கள் இந்தியை நேசித்து கற்றுக் கொண்டோம். ஆனால் உங்கள் கேள்விக்கு நான் கன்னடத்தில் பதில் அளித்து இருந்தால் உங்கள் நிலைமை என்னவாகும்? நாங்களும் இந்தியாவை சேர்ந்தவர்கள் அல்லவா?” என்று கேள்வி எழுப்பினார்.
இந்த பதிவு ட்விட்டரில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதை யடுத்து அஜய் தேவ்கன், “தவறான புரிதலை சரி செய்தமைக்கு நன்றி. நான் எப்போதும் சினிமா துறையை ஒன்றாகதான் நினைக்கிறேன். நாங்களும் எல்லா மொழிகளையும் மதிக்கிறோம், எங்கள் மொழியையும் அனைவரும் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார். இத்துடன் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்தி மொழி விவகாரத்தில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் நடிகர் சுதீபுக்கு ஆதரவாக கருத்துகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், பெங்களூருவில் உள்ள மைசூரு வங்கி சதுக்கத்தில் நேற்று கர்நாடக ரக் ஷன வேதிகே அமைப்பினர் தேவ்கன் மற்றும், இந்தி மொழிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT