

தரமான கதைக்களத்துடன் அண்மையில் தமிழ் திரையுலகில் வெளியான திரைப்படங்கள் குறித்துப் பார்க்கலாம். இதில் சில படங்களை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்துள்ளனர். சில படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை எனவும் சொல்லலாம்.
அண்மைய காலமாக பான் இந்தியா (Pan India) சினிமா என்ற போக்கு இருந்து வருகிறது. இது இந்திய சினிமாவுக்கு ஊக்கமான விஷயம்தான். ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டுமே இருந்து வந்த வணிகம் நாடு முழுவதும் இதனால் கிடைக்கிறது. பெரும்பாலும் ஹாலிவுட் திரைப்படங்கள் இந்தியாவில் மாநில மொழியில் டப் செய்யப்பட்டு வெளியாவது வழக்கம். அதற்கு ரசிகர்களின் அமோக ஆதரவும் இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக இந்த ட்ரெண்டை இந்திய சினிமா துறை கடைப்பிடித்து வருகிறது.
அப்படி கடந்த 14-ஆம் தேதி அன்று வெளியான திரைப்படம் தான் 'கே.ஜி.எஃப்: சாப்டர் 2'. இந்திய அளவில் செம்மையான வசூலை ஈட்டி வருகிறது. அதனை கண்டு கடுப்பில் சில பாலிவுட் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களும் அது குறித்து தங்களது கருத்துகளை சொல்லி வருகின்றனர். ''உச்ச நட்சத்திரங்கள் அதிக சம்பளம் வாங்குவதால் தமிழ் சினிமாவின் தரம் குறைகிறது'' என வெளிப்படையாக சொல்லியிருந்தார் நடிகரும், தயாரிப்பாளருமான அருண்பாண்டியன். இத்தகைய சூழலில் கடந்த ஒரு ஆண்டில் வெளியான தரமான தமிழ் படங்களான மண்டேலா முதல் கடைசி விவசாயி வரை பார்க்கலாம்.
மண்டேலா: கடந்த 2021 ஏப்ரலில் வெளியாகி இருந்தது நடிகர் யோகி பாபு நடிப்பில் வெளிவந்த மண்டேலா திரைப்படம். பஞ்சாயத்து தேர்தலை பின்புலமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம். தனியார் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகி இருந்தது. நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்திலும் வெளியாகி இருந்து. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக பாசிட்டிவ் ரியாக்ஷனை பெற்றிருந்தது. ரசிகர்கள் மத்தியிலும் கவனம் ஈர்த்திருந்தது. சிறந்த வெளிநாட்டு படமாக அகாடமி விருதுகளுக்கு ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்ட 14 படங்களில் இதுவும் ஒன்று.
மேதகு: வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறப்பு முதல் ஆயுதம் ஏதும் வரையிலான வாழ்க்கையை விவரித்த திரைப்படம் மேதகு. குறைந்த பட்ஜெட்டில் பெரிய குறைகளை அடையாளம் காண முடியாத திரைப்படமாக இது வெளியாகி இருந்தது. மண்டேலாவை போலவே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்ற படம். ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. ஐஎம்டிபி ரேட்டிங்கில் 8.5 பெற்றிருந்தது.
சார்பட்டா பரம்பரை: இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யா, பசுபதி, கலையரசன் போன்ற நடிகர்கள் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. மக்களின் வாழ்வியலை இயல்பாக படம் பிடித்திருந்தது சார்பட்டா. இயக்கம், நடிப்பு, கலை, ஒப்பனை, ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் அமர்க்களமாக இருந்தது. கடந்த ஆண்டில் அமேசான் பிரைமில் அதிக முறை பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமாக இது இருந்ததாக தகவல். விமர்சகர்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பிலும் வரவேற்பை பெற்றிருந்த படம்.
லிஃப்ட்: இயக்குனர் வினீத் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் லிஃப்ட். நடிகர் கவின் மற்றும் அமிர்தா அய்யர் ஆகியோர் இதில் நடித்திருந்தனர். ஒளிப்பதிவு, கலை, இயக்கம், நடிப்பு என ஒவ்வொன்றிலும் கவனம் ஈர்த்த திகில் திரைப்படம். ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது.
ஜெய் பீம்: நடிகர் சூர்யா தயாரித்து, நடித்திருந்த திரைப்படம் தான் ஜெய் பீம். ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. உண்மை சம்பவத்தை தழுவி உருவாக்கப்பட்ட படம். இயக்குனர் ஞானவேல் இயக்கி இருந்தார். ஐஎம்டிபி ரேட்டிங்கில் 8.9 பெற்ற படம். விமர்சன ரீதியாக வரவேற்பும், திரை ரசிகர்களின் ஆதரவையும் பெற்றிருந்தது. அதே நேரத்தில் இந்த படம் சர்ச்சையாகவும் வெடித்திருந்தது.
கடைசீல பிரியாணி: தங்களது தந்தையை கொன்றவரை பழி வாங்கும் மூன்று 'பாண்டி' சகோதரர்களின் கதை. அவர்கள் பழி வாங்கினார்களா? அவர்களது தலைவிதிப்படி நடந்தது என்ன? என்பதுதான் கதைக்களம். மிகவும் தாமதமாக ரிலீஸ் ஆன திரைப்படம். இயக்கம், ஒளிப்பதிவு, காட்சி அமைப்பு, கதை என அனைத்தும் அற்புதமாக இருந்தது. தியேட்டரில் வெளியாகியும் கவனத்தை ஈர்க்க தவறியது. இந்த படத்தின் இயக்குனர் நிஷாந்துக்கு இதுதான் முதல் படம் என சொன்னால் மட்டுமே தெரியும். அந்த அளவுக்கு தனது பணியில் அவர் கவனம் செலுத்தி இருப்பார்.
3:33 : தியேட்டர்களில் வெளியான திரைப்படம் 3:33. இயக்குனர் நம்பிக்கை சந்துரு இயக்கி இருந்தார். ஒரு வித்தியாசமான முயற்சி என இந்த படத்தை சொல்லலாம். நடன இயக்குனர் Sandy நடித்திருந்தார். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும் இதில் நடித்திருந்தார். இருந்தாலும் பெருவாரியான மக்களின் கவனத்தை ஈர்க்க தவறியது.
ராக்கி: நான்கு அத்தியாயங்களாக கதையை சொல்லியிருப்பார் அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன். நடிகர்களின் நடிப்பு, ஒளிப்பதிவு, இயக்கம், கதை, திரைக்கதை, காட்சி அமைப்பு, பின்னணி இசை என ஒவ்வொன்றிலும் கவனத்தை ஈர்த்த படம். விமர்சன ரீதியாக வரவேற்பையும் பெற்றிருந்தது.
பன்றிக்கு நன்றி சொல்லி: கடந்த பிப்ரவரியில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்த படம். புதையல் வேட்டையை தேடி செல்லும் கதை. பிளாக் காமெடி ஜானரில் வெளியாகி இருந்தது. தொழில்நுட்ப ரீதியாக கவனம் ஈர்த்தது.
கடைசி விவசாயி: இந்தப் படத்தின் தலைப்புக்கு ஏற்ற வகையில் படம் இருந்தது. 'காக்கா முட்டை' புகழ் இயக்குனர் மணிகண்டன், எழுதி - இயக்கிய திரைப்படம். தயாரிப்பு, ஒளிப்பதிவு பணிகளையும் அவரே கவனித்துக் கொண்டார். இந்த படத்தில் விவசாயியாக மாயாண்டி என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்த நல்லாண்டி தாத்தாவின் நடிப்பு பிரமாதமாக இருக்கும். நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பும் அற்புதமாக இருக்கும். படைப்பாளிகளின் கவனத்தை ஈர்த்த படம். ஐஎம்டிபி ரேட்டிங்கில் 8.9 பெற்றுள்ள படம் இது.
இது தவிர கமர்ஷியல் ரீதியாகவும், கன்டென்ட் ரீதியாகவும் மாநாடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. டைம் லூப் ஜானரில் ஜாங்கோ என்ற திரைப்படமும் வந்திருந்தது. அண்மையில் வெளியான டாணாக்காரன் திரைப்படமும் விமர்சன ரீதியாக கவனத்தை ஈர்த்தது.