Published : 21 Apr 2022 08:17 PM
Last Updated : 21 Apr 2022 08:17 PM

''நீங்க மாட்டேன்...'' - சர்ச்சைகள் சற்றே ஓய்ந்த நிலையில் ட்வீட்டில் பாடிய இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், தனது குரலில் ஒலிக்கும் 'நான் உன்னை நீங்க மாட்டேன்' என பாடலை பதிவிட்டுள்ளார். இதை அவரது ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் நிறுவனம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சீர்திருத்தவாதிகளின் கருத்துகளும், செயல்பாட்டாளர்களின் அமலாக்கமும் என்ற தலைப்பில் புத்தகத்தின் முன்னுரையில் இசையமைப்பாளர் இளையராஜா, “பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது.

இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது, சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். ''மோடியை அம்பேத்கருடன் ஒப்பிடுவது முற்றிலும் தவறானது'' என கூறி பெரிய சர்ச்சையே வெடித்து, தற்போது அடங்கியிருக்கிறது.

இந்நிலையில், இளையராஜா 'நான் உன்னை நீங்க மாட்டேன். நீங்கினால் தூங்க மாட்டேன்' என்ற தளபதி படத்தின் தனது குரலில் ஒலிக்கும் பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அசல் பாடல் வரிகளில் சில மாற்றங்களைச் செய்து, "பாடுவேன் உனக்காகவே... இந்த நாள் நன்னாள் என்று பாடு... என்னதான் இன்னும் உண்டு கூறு" என்று வரிகளைச் சேர்த்துப் பாடியிருக்கிறார்.

ஒருபுறம் 'மோடி - அம்பேத்கர்' சர்ச்சைகள் சற்றே ஓய்ந்த நிலையில், இளையராஜாவின் இந்தப் பாடல் பதிவேற்றம் குறித்து ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x