Published : 04 Apr 2016 07:51 AM
Last Updated : 04 Apr 2016 07:51 AM

பாரதிராஜா இயக்கத்தில் ‘குற்றப்பரம்பரை’: மதுரை அருகே பட பூஜை

பாரதிராஜா இயக்கத்தில் உருவாகும் ‘குற்றப்பரம்பரை’ திரைப்படத்துக்கான பூஜை மதுரை அருகே நேற்று நடந்தது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் போது ஒரு குறிப்பிட்ட இனத்தவர்களை ஒடுக்குவதற்காக 1911-ம் ஆண்டு தமிழ்நாட்டில் குற்றப்பரம்பரைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி குற்றப்பரம்பரை எனக் கூறப்படும் ஜாதியைச் சேர்ந்த ஆண்கள் இரவு முழுவதும் காவல் நிலையத்திலேயே தங்க வேண்டும்.இதனால் கள்ளர், வலையர், மறவர், குறவர் உள்ளிட்ட பல்வேறு ஜாதியினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இச்சட்டத்துக்கு எதிராகப் பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தினர். அதன் விளைவாக 1947-ம் ஆண்டு இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்த சட்டம் குறித்து பல்வேறு புத்தகங்கள், குறும்படங்கள், ஆவணப் படங்கள் வெளிவந்துள்ளன. அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் பாலா, ‘குற்றப்பரம்பரை’ என்ற பெயரில் திரைப்படம் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. அதே சமயம் இயக்குநர் பாரதிராஜா நீண்ட காலமாக இந்த படத்தை இயக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காம நல்லூர் கிராமத்தில் குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த தியாகிகளின் நினைவுத் தூண் உள்ளது. அங்கு இயக்குநர் பாரதிராஜா நேற்று அஞ்சலி செலுத்தினார். அப்போது ‘குற்றப்பரம்பரை’ படத்துக்கான பூஜையை பாரதிராஜா தொடங்கினார்.

இதில் இயக்குநர்கள் சீமான், பேரரசு, ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x