

ராஜ்குமார் ஹிரானியுடன் நடிகர் ஷாருக்கான் இணையும் புதிய படத்திற்கு 'டன்கி' என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் அடுத்த ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'3 இடியட்ஸ்' 'பிகே' 'சஞ்சு' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியுடன் 'டன்கி' என்ற புதிய படத்தில் ஷாருக்கான் இணைகிறார். இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக டாப்சி நடிக்கிறார். ரொமான்ஸ், காமெடி, சென்டிமென்ட் அடங்கிய படமாக இந்தப் படம் இருக்கும் என ராஜ்குமார் ஹிரானி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜாலியான வீடியோ ஒன்றும் வெளியிடபட்டுள்ளது. அதில் ராஜ்குமார் ஹிரானியின் முந்தைய பட போஸ்டர்களை பார்த்து வியந்துகொண்டிருக்கும் ஷாருக்கானிடம், 'என்ன பாக்குறீங்க?' என இயக்குநர் கேட்க, 'ஒண்ணுல்ல சார் உங்க முன்னாடி படங்கள பாத்திட்டு இருக்கேன்' என்கிறார் ஷாருக். அடுத்து 'எனக்கும் இதே மாதிரி படம் எதும் இருக்கா?' என கேட்க, 'உங்களுக்கு ஒரு ஸ்கிர்பட் வைச்சிருக்கேன்' என ராஜ்குமார் ஹிரானி கூறி படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பாலிவுட்டின் முக்கியமான இயக்குநரான ராஜ்குமார் ஹிரானியுடன், பாலிவுட் பாட்ஷா என புகழப்படும் ஷாருக்கான் இணையும் இந்தப் படத்தின் அறிவிப்பை ஒட்டுமொத்த திரையுலகமே கொண்டாடி வருகிறது. டன்கி மற்றும் பதான் தவிர ஷாருக், அட்லீயின் படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு தற்காலிகமாக 'லயன்' என பெயரிடப்பட்டுள்ளது. ஷாருக்கானின் 'பதான்' படம் அடுத்த வருடம் ஜனவரி 25ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாருக்கான் கடைசியாக 2018-ம் ஆண்டு வெளியான 'ஜீரோ' படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.