

பாலிவுட் நடிகர்கள் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இருவரும் திருமணம் செய்துள்ளனர்.
2018-ம் ஆண்டிலிருந்து ஆலியாவும், ரன்பீரும் காதலித்து வருகின்றனர். இருவரும் ஒன்றாக ஒரு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். அதைத் தாண்டி இருவரையும் பொது இடங்களில் ஒன்றாகப் பார்ப்பது அரிதே. கரோனா ஊரடங்கு சமயத்தின் போது இருவரும் ஒரே வீட்டில் தங்கியிருந்தனர். இதன்பின் இருவரும் குடும்ப மற்றும் பொது நிகழ்வுகளில் ஒன்றாக கலந்துகொண்டு தங்கள் காதலை வெளிப்படுத்தினர்.
நேற்று இருவரின் திருமண சடங்கு நிகழ்வுகள் தொடங்கின. மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள ரன்பீர் கபூரின் வாஸ்து இல்லத்தில் சடங்கு நிகழ்வுகள் தொடங்கின. விஐபிக்கள் வருவதால் வாஸ்து இல்லத்தின் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.
முதலில் ரன்பீர் கபூர் மற்றும் அவரின் குடும்பத்தினர் தங்களது கிருஷ்ண ராஜ் பங்களாவில் இருந்து திருமணம் நடைபெறும் வாஸ்து இல்லத்திற்கு ஊர்வலமாக வருகை தந்தனர். அங்கு திருமண சடங்கு நிகழ்வுகள் தொடங்கின. ஆலியா பட் திரையுலகில் அறிமுகப்படுத்திய கரண் ஜோஹர் திருமண விழா தொடங்கி வைத்தார்.
ஆலியாவுக்கு மருதாணி வைத்து அவர் ஆரம்பித்து வைக்க திருமண விழா களைகட்டியது. கபூர் சகோதரிகளில் எனப்படும் கரீனா கபூர் மற்றும் கரிஷ்மா கபூர், அமிதாப்பச்சன் மகள் ஸ்வேதா நந்தா, முகேஷ் அம்பானி மகன் ஆகாஷ் அம்பானி என முக்கிய பிரமுகர்கள் சிலர் மட்டுமே கலந்துகொண்டனர்.
பஞ்சாப் முறைப்படி, நான்கு புரோகிதர்கள் திருமணத்தை நடத்தி வைக்க ஏழு முறை சுற்றி வந்து ஆலியாவை முறைப்படி கரம்பிடித்தார் ரன்பீர். பின்னர் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ரன்பீர் கபூர் தாயார் நீது கபூர் நடனமாடினார்.
திருமண நிகழ்வுகள் முடிந்த பின் 7 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர் தம்பதிகள் இருவரும்.
முன்னதாக, விருந்தினர்களை தடபுடலாக உபசரிக்க 50 உணவு கவுன்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இத்தாலியன், பஞ்சாபி, மெக்சிகன், ஆப்கான் உணவு வகைகள் உடன் 25 வகையான சைவ உணவுகளுக்கும் தயார் செய்யப்பட்டிருந்தது. சைவ உணவுகள் ஆலியாவுக்காக ஏற்பாடு செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. காரணம், ஆலியா சைவ உணவு விரும்பி.
ரன்பீரை கரம்பிடித்தது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் ஆலியா, "இன்று, எங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எங்களுக்கு பிடித்த, கடந்த 5 ஆண்டுகளாக நாங்கள் பல முறை நேரம் செலவழித்த பால்கனியில் இருவரும் திருமணம் செய்துகொண்டோம்.
காதல், சிரிப்பு, மௌனம், இரவுகள், வேடிக்கையான சண்டைகள் என எங்களின் நினைவுகள் நிறைய உள்ளன. மேலும் பல நினைவுகளை உருவாக்கவுள்ளோம். எங்களின் வாழ்க்கையில் இந்த மிக முக்கியமான தருணத்தில் அனைவரின் அன்புக்கும் நன்றி. காதலுடன் ரன்பீர் மற்றும் ஆலியா!" என்று நெகிழ்ந்துள்ளார்.