

வட இந்திய வட்டாரங்களில் தென்னிந்திய படங்களின் வெற்றிக்கான காரணத்தை யஷ் விளக்கியுள்ளார்.
'புஷ்பா', 'ஆர்.ஆர்.ஆர்' என அடுத்தடுத்து தென்னிந்திய திரைப்படங்கள் இந்தி மொழி பேசும் வட்டாரங்களில் பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் சம்பாதித்து வருகின்றன. இதைப்பற்றி பேசிய பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், "தென்னிந்திய மொழி திரைப்படங்கள் இங்கு நன்றாக ஓடுகின்றன. ஆனால், தென்னிந்தியாவில் பாலிவுட் படங்கள் ஏன் அவ்வளவாக வெற்றி பெறுவது இல்லை என்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது." என்கிற ரீதியில் பேசியிருந்தார்.
சல்மானின் இந்த கருத்துக்கு கே.ஜி.எஃப் நாயகன் யஷ் பதில் அளித்துள்ளார். அதில், "இதை அப்படி பார்க்க வேண்டியதில்லை என நினைக்கிறேன். எங்கள் படங்களும் சில சமயங்களில் தகுந்த வரவேற்பை பெறுவதில்லை. என்ன நடக்கிறதென்றால், படங்களை டப் செய்கிறார்கள். ஒருகட்டத்தில் நாங்கள் உருவாக்குவதற்கு மக்கள் பழகிக்கொள்கிறார்கள். ஆரம்பத்தில் இது போன்ற படங்களை நகைச்சுவையாக நினைத்தார்கள்.
ஏனென்றால், டப்பிங் செய்யும் விதம் அப்படி இருந்தது. இந்த பாணிக்கு உரித்தான முக்கியதுவம் கொடுக்கவில்லை. ஆனால் இன்று எங்கள் கதை சொல்லும் முறையை, எங்கள் சினிமாவை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். இந்த மாற்றம் ஒரே இரவில் நடக்கவில்லை. சில வருடங்களாகவே இதற்கான வேலைகள் நடந்தது. இறுதியில் எங்களின் கன்டென்ட்கள், ரசனைகள் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள ஆரம்பித்தனர். அதன்பின், ராஜமௌலி சாரின் பாகுபலி படம் அங்கு வணிகத்தை ஆரம்பித்து வைத்தது. அதைத் தொடர்ந்து கே.ஜி.எஃப்பும் அதை சரியாக செய்தது.
நமது கலாச்சாரத்தில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அது நமது பலவீனமாக மாறுவதை விட நமது பலமாக மாற வேண்டும். இந்தி படங்களை நாங்களும் பார்க்கிறேம். பாலிவுட் நட்சத்திரங்களை நாங்களும் ரசிக்கிறோம். இந்தி படங்கள் இங்கும் பெரும் வெற்றி பெற்ற படங்கள் நிறைய உள்ளன. ஆனால், சல்மான் கான் சொல்வது போல வணிக ரீதியாக இந்தி படங்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்த தவறுகின்றன. தென்னிந்திய மக்களையும் தொடர்புபடுத்தக் கூடிய அம்சங்களை கொண்டு எடுத்தால் அது வெற்றிபெற சாத்தியம் உண்டு.
படத்தை வெளியிடுவது மட்டுமல்ல, மற்ற அம்சங்களையும் இங்கு பார்க்க வேண்டும். அது விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன்" என்று பேசியுள்ளார்.