

படப்பிடிப்பிற்காக அமைக்கப்பட்ட வீடுகளை, வீடில்லாத ஏழைகளுக்கு வழங்க 'சூர்யா 41' படக்குழுவினர் முடிவெடுத்திருப்பது சமூக வலைதளங்களில் பாராட்டை பெற்றுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் பாலாவுடன் கைகோத்திருக்கிறார் நடிகர் சூர்யா. இன்னும் தலைப்பிடாத இந்தப் படம் 'சூர்யா41' என அழைக்கப்படுகிறது. இந்தப் படத்தில் சூர்யா மீனவராக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் நாயகியாக கிருத்தி ஷெட்டி நடிக்கிறார். மற்றொரு நாயகியாக, மலையாள நடிகை மமிதா பைஜூ நடிக்கிறார். படத்தில் பல முன்னணி நடிகர்களும் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்னதாக கன்னியாகுமரியில் உள்ள ஒரு கிராமத்தில் தொடங்கியது. 'சூர்யா 41' படப்பிடிப்பிற்காக படக்குழு உண்மையாகவே குடிசை வீடுகளை கட்டியிருக்கிறது. படப்பிடிப்பு முடிந்த பின்பு, இந்த வீடுகளை வீணாக்காமல், வீடில்லாமல் தவிக்கும் அந்தப் பகுதி ஏழைகளுக்கு வழங்க படக்குழு முடிவெடுத்துள்ளது. சூர்யா மற்றும் அவரது குழுவினர் ஆதரவற்றோர்களுக்கு வீடு வழங்க திட்டமிட்டிருப்பது அவரது ரசிகர்களால் சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.