Last Updated : 10 Jun, 2014 12:00 AM

 

Published : 10 Jun 2014 12:00 AM
Last Updated : 10 Jun 2014 12:00 AM

ஜூன் 10, 1963- இரு பாலருக்கும் சமமான சம்பளம் என்று சட்டம் வந்த நாள்

ஆண்களுக்குப் பெண்கள் சமமல்ல என்று பேசி வந்தவர்களுக்குப் பதிலடி தருவதுபோல, அமெரிக்காவில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாகச் சம்பளம் வழங்க வேண்டும் என்ற சட்டம் வந்த முக்கியமான நாள் இன்று.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜான் எஃப் கென்னடி இருந்தபோது அமெரிக்க மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பல முயற்சிகளை மேற்கொண்டார். அவற்றுள் ஒன்றாக ஆண்-பெண் சம்பளங்களில் உள்ள ஏற்றத்தாழ்வைச் சட்டரீதி யாக ஒழிக்கும் நோக்கில் ஒரு சட்டத்தை அவர் கொண்டுவந்தார். 1963-ம் ஆண்டு சமமான சம்பளச் சட்டத்தை அமெரிக்க அரசு கொண்டுவந்தது.

தகுதி மற்றும் பணிமூப்பு ஆகிய காரணங்களைத் தவிர சமமான வேலைக்குச் சமமான சம்பளம் பெண்களுக்குத் தரப்பட வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் எந்த நிறுவனத்திலும் பாலினப் பாகுபாடு இருக்கக்கூடாது. இருந்தால் அது தண்டனைக்குரிய சட்ட மீறல் என அந்தச் சட்டம் அறிவித்தது. இந்தச் சட்டத்துக்குப் பெண்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.

எனினும், சமமான சம்பள உரிமை அனைத்துப் பெண்களுக்கும் பலனளிக்கவில்லை என்று கருதப் படுகிறது. இந்தச் சட்டத்தைப் பல நிறுவனங்கள் பின்பற்றுவதில்லை. பெரும்பாலும் கடினமான உடல் உழைப்பு வேலைகளை ஆண்கள் செய்வதாலும் பெண்கள் நிர்வாகப் பணிகளைச் செய்வதாலும் இருவருக்கும் சமமான சம்பளத்தை நிர்ணயிக்க முடியவில்லை என்று சட்டத்தை அமலாக்காமல் இருப்பதற்குப் பல காரணங்களை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

சட்டம் அறிவிக்கப்பட்டு 45 ஆண்டுகள் ஆன பின்னரும் 2005-ல் ஹிலாரி கிளிண்டனும் 2009-ல் அதிபர் ஒபாமாவும் சமமான சம்பளச் சட்டத்தை அமலாக்க மேலும் கடுமையான, துல்லியமான சட்டங்களை உருவாக்குவதுபற்றி விவாதித்தனர். இன்னும் சமமான சம்பள உரிமை அமெரிக்கப் பெண்களைச் சென்றடையவில்லை என்பதற்கு இதுதான் சாட்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x