Published : 24 Jun 2014 07:41 am

Updated : 24 Jun 2014 10:41 am

 

Published : 24 Jun 2014 07:41 AM
Last Updated : 24 Jun 2014 10:41 AM

உக்ரைனை மறந்துவிட வேண்டாம்!

இராக் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டால் உக்ரைன் பிரச்சினை மறுபடியும் தலையெடுக்கும்.

சர்வதேச விவகாரங்களைப் பொறுத்தவரை புதிதாக ஒன்று தோன்றினால் அதற்கு முந்தையது நினைவை விட்டு நீ்ங்கிவிடும். நேற்றைக்கு, அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகவும் உலக அமைதிக்கே அச்சுறுத்தல் என்று கருதத் தக்கதாகவும் இருந்த விஷயம் அடுத்த விவகாரம் கிளம்பிய உடனேயே மறக்கப்பட்டுவிடும்.

ஒரு மாதத்துக்கு முன்னால் - இராக்கில் உள்நாட்டுப் போர் தொடங்குவதற்கு முன் உக்ரைன்தான் தலை போகிற விஷயமாகப் பேசப்பட்டது. ரஷ்யா, கிரீமியா வைத் தன்னுடைய நிலப்பரப்புடன் சேர்த்துக் கொண்டு விட்டு உக்ரைனின் கிழக்கு மாநிலங்களிலும் நுழைய எத்தனித்தது. இருதரப்பு உடன்பாடுகளையும் சர்வ தேசச் சட்டங்களையும் அதன் மூலம் மீறியது. அமெரிக்கா வும் சில மேற்கத்திய நாடுகளும் அதன்மீது தடை நட வடிக்கைகளை அறிவித்தன. மீண்டும் ஒரு பனிப்போர் ஆரம்பித்துவிடுமோ என்கிற அச்சம்கூட ஏற்பட்டது.

புதினுக்கு ஞானோதயம்

அதன் பிறகு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு ஞானோதயம் பிறந்தது. மேலும் படையெடுத்தால் மேற்கத்திய நாடுகளுடன் கொஞ்சநஞ்சமிருக்கிற சுமுக உறவும் அறவே அறுந்துவிடும் என்பதால் அத்துடன் நிறுத்திக்கொண்டார். மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை மேலும் கடுமையாக்கினால் ரஷ்யாவின் பாடு படுதிண்டாட்டமாகப் போயிருக்கும். ரஷ்யாவின் தொழில்துறை கடுமையான சரிவைச் சந்தித் திருக்கும். இப்போதே அவற்றின் நிலைமை அதுதான்!

உக்ரைனுக்கு எதிராக நிறுத்தியிருந்த ரஷ்யப் படைகளில் பெரும்பாலானவற்றைத் திரும்ப அழைத்துக் கொண்ட புதின், உக்ரைன் அதிபராக பொரஷங்கோ (48) தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரித்தார். உக்ரைனின் கிழக்குப் பகுதியில் தலையிடுவதை நிறுத்திக்கொண்ட புதின், பிரிவினைவாதக் குழுக்களைத் தொடர்ந்து ஆதரிப்பது என்ற முடிவையும் எடுத்திருக்கிறார். உக்ரைன் எல்லையில் ஏற்பட்ட ஆபத்து நீங்கிவிட்டது என்றே உலகம் நினைக்கிறது. இப்போது எல்லா நாடுகளின் கவனமும் மத்தியக் கிழக்கில், குறிப்பாக இராக் மீது திரும்பியிருக்கிறது.

உக்ரைன் விவகாரம் முடியவில்லை

உக்ரைன் விவகாரம் இன்னும் முடியவில்லை என்பதையே அதிபர் தேர்தல் முடிந்த மறுநாளில் டோனட் ஸ்க் விமான நிலையத்தைக் கைப்பற்ற நடந்த சண்டை உணர்த்துகிறது. தேர்தலுக்கு முன்பைவிட தேர்தல் முடிந்த பிறகே தீவிரமான சண்டை நடந்து உக்ரைன் ராணுவத்தரப்பில் 49 பேர் இறந்தனர். இரு தரப்பும் சிறு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டு பீரங்கிகள் போன்ற கனரக ஆயுதங்களைப் பயன் படுத்தியதால் உயிரிழப்பு அதிகரித்தது. ராணுவத்தின் போக்குவரத்து விமானமே சுட்டுவீழ்த்தப்பட்டது.

கிழக்கு உக்ரைனைப் பொறுத்தவரை புதிய அதிபர் இரட்டைக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறார். அதாவது, பிரிவினைவாதிகள் கைப்பற்றிய பிரதேசங்களை மீட்க அவர் தொடர்ந்து ராணுவப் படைகளை அனுப்புவார். அதே சமயம் ஆங்காங்கே கைகலப்புகளும் குடிமக்கள் மரணமும் ஏற்படாமல் தடுக்க, சண்டை நிறுத்தத்துக்கும் பேச்சுவார்த்தைக்கும் அவர் தயாராக இருக்கிறார். இன்னொரு வகையில் சொல்வதானால் - ரஷ்ய அதிபர் புதினும், வெளியுறவு அமைச்சர் செர்கி லவரோவும் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க முடியாது என்று மறுத்துவிட்டார். உக்ரைனியப் படைகள் முழுவதும் கிழக்குப் பகுதியிலிருந்து விலகினால்தான் அவர்களுடன் பேச முடியும் என்று புதினும் லவரோவும் நிபந்தனை விதித்தனர். அதை உக்ரைன் அதிபர் பொரஷங்கோ ஏற்கவில்லை.

சண்டையிட்டுக்கொண்டே பேசுவது என்ற பொரஷங்கோவின் இரட்டைக் கொள்கை ஆபத்தானது. ஆனால், ரஷ்யாவைச் சிக்கலில் ஆழ்த்துவது. சண்டை மேலும் வலுப்பட்டால் ரஷ்யா ராணுவத்தைத் தீவிரமாக ஈடுபடுத்த நேரிடும். அப்போது உக்ரைனில் ரஷ்யா ராணுவரீதியாகத் தலையிடுவதை மறைக்க முடியாது. அப்படி நேர்ந்தால் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் உதவுவதுடன் ரஷ்யா மீதான தடைகளைத் தீவிரப்படுத்தக்கூடும். உண்மையில் ரஷ்யா இப்போது உக்ரைன் மீது ராணுவத் தாக்குதல் நடத்த விரும்பவில்லை. எனவேதான், பொரஷங்கோ தாக்குதலை நிறுத்திவிடுவதாக அறிவிக்க முன்வந்தார்.

இது ஏதோ ரஷ்யாவுக்குத் தரும் சலுகைபோலத் தெரிந்தாலும், இந்த அறிவிப்புக்குப் பின்னர் சில நிபந்தனைகளும் இருக்கின்றன. உக்ரைனின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த பிரிவினைவாதிகள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும், ரஷ்யத் துருப்புகள் தங்களுடைய நாட்டு எல்லைக்குத் திரும்ப வேண்டும், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை மூடப்பட வேண்டும் என்பவை நிபந்தனைகளாகும். இந்த நிபந்தனைகளை ரஷ்யா ஏற்காவிட்டால் பிரிவினைவாதிகளை எதிர்த்து உக்ரைன் தொடர்ந்து சண்டையிடும் என்று தெரிவித்துள்ளார்.

தொலைபேசிப் பேச்சு

இந்த சண்டை நிறுத்த நிபந்தனைகளைப் புதினுடன் நேரடியாகத் தொலைபேசி மூலம் பேசியபோது பொரஷங்கோ தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்க அம்சம். எனவே, நல்லவிதமாக இது முடியும் என்கிற நம்பிக்கையை ஊட்டுகிறது. எல்லாத் தரப்புக்குமே ஓரளவுக்குத் திருப்தியை அளிக்கக்கூடிய சமரசத் தீர்வு எப்போதோ தயாராகிவிட்டது. உக்ரைனில் உள்ள கிழக்குப் பகுதிக்கு ஓரளவுக்கு சுயாட்சி தந்துவிடலாம் என்பது சமரச யோசனைகளில் முக்கியமானது. நேடோ அமைப்பில் உறுப்பினராகச் சேர மாட்டோம் என்று உக்ரைன் உறுதியளித்தால், ரஷ்யாவுக்கு அதுவே போதும் என்பதும் மற்றொரு அம்சம்.

உக்ரைனில் தலையிட்டதால் மேற்கொண்டு சேதம் ஏதும் தங்களுக்கு ஏற்பட்டுவிடாமல் தடுத்துக்கொள்ள வேண்டியது புதினின் கடமை. கிரீமியாவை ரஷ்யாவுடன் சேர்த்துக்கொண்டதன்மூலம் ரஷ்யர்களிடையே மிகப் பெரிய தேசியவாதியாகப் பெயரெடுத்துவிட்டார் புதின். அதே சமயம், ஆசிய நாடுகள் எதுவும் அதைப் பெரிய தவறாக நினைக்கவில்லை. ஆனால், உலகின் பிற நாடுகள், குறிப்பாக மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து விலகின. உக்ரைனுடனும் ஐரோப்பிய நாடுகளுடனும் அமெரிக்காவுடனும் நல்லுறவைப் பேணுவதா அல்லது உக்ரைன் விவகாரத்தில் தொடர்ந்து தலையிட்டு மற்றவர்களின் விரோதத்தை அதிகரித்துக்கொள்வதா என்பதை புதின்தான் முடிவு செய்ய வேண்டும்.

உலக அரங்கில் நாடுகள் தொடர்பான செய்திகள் தொடர் நாடகங்களாக ஒன்றன்பின் ஒன்றாக நீண்டு கொண்டே போகின்றன. புதிய பிரச்சினை வந்ததும் பழையதும் மறைந்துவிடும் என்றோ மறக்கப்பட்டுவிடும் என்றோ கருத வேண்டியதில்லை. புதிய பிரச்சினை சற்று ஆறிப்போன பிறகு, பழைய பிரச்சினையே மீண்டும் தலைதூக்கும். இராக் பிரச்சினை சில வாரங்களுக்குப் பிறகு மங்கிவிடும். அப்போதும் உக்ரைன் பிரச்சினையில் தீர்வு ஏற்படாவிட்டால் அது மீண்டும் மையக் களத்துக்கு வந்துவிடும்.

தி கார்டியன், தமிழில்: சாரி

இராக் பிரச்சினைஉக்ரைன் பிரச்சினைஉலக அமைதி

You May Like

More From This Category

More From this Author