

'நிலமெல்லாம் ரத்தம்' என்ற புதிய இணையத் தொடருக்கு இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுதியுள்ளார். அமீர் நடிப்பில் ரமேஷ் இயக்கியுள்ள இந்தத் தொடருக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
ஜி5 ஓடிடி தளம் 10 இணையத் தொடர்களை வெளியிட உள்ளது. அதன்படி, பிரகாஷ்ராஜ் நடிப்பில் 'அனந்தம்', வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்', ஏ.எல்.விஜய்யின் 'பைவ், சிக்ஸ், செவன், எயிட்', கிருத்திகா உதயநிதியின் 'பேப்பர் ராக்கெட்', அமீர் நடிப்பில் வெற்றிமாறன் எழுதி ரமேஷ் இயக்கியுள்ள 'நிலமெல்லாம் ரத்தம்' உள்ளிட்ட வெப் சீரிஸ்கள் இடம்பெற்றுள்ளன. 'நிலமெல்லாம் ரத்தம்' இணையத் தொடருக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
இந்நிலையில், 'நிலமெல்லாம் ரத்தம்' இணையத் தொடரை அறிமுகம் செய்துவைத்து பேசிய வெற்றிமாறன், ''ஒரு நாள் அமீர் என்னை அழைத்து இந்த மாதிரி ஒரு ஐடியா இருக்குன்னு சொன்னாரு. பேசிட்டு இருந்தோம். அப்போ நீங்களே எழுதுங்கன்னு சொல்லிட்டாரு. சரி எழுதலாம்னு முடிவு பண்ணி ஆலோசிச்சோம். இது ஒரு வெப் சீரிஸ் மாதிரி இருந்தா நல்லாருக்கும்னு யோசிச்சேன்.
வெப் சீரிஸ் திரைக்கதை எழுத்தாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். அதுல நெறையவே எழுதுறதுக்கான வாய்ப்பு கிடைக்கும். ஒரு படம்னு எடுத்துக்கிட்டா அதுல 200 பக்கத்துக்கு மேல எழுத முடியாது. ஆனா வெப் சீரிஸ்ல அதையும் தாண்டி எழுதிகிட்டை போகலாம். ஒரு படத்துல இருக்குற கட்டுபாட்ட கடந்து வெப் சீரிஸ்ல நெறைய விஷயங்கள் பேசலாம்னு நம்புறேன்'' என்றார்.