Published : 01 Apr 2022 12:01 PM
Last Updated : 01 Apr 2022 12:01 PM

'மன்மதலீலை' படத்தின் காலைக் காட்சிகள் ரத்து: ரசிகர்கள் ஏமாற்றம்

சென்னையில் உள்ள ஈகா தியேட்டரின் முன்பு காத்திருந்த ரசிகர்கள்

சென்னை: வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள 'மன்மதலீலை' படம் இன்று (ஏப்.1) வெளியாகவிருந்த நிலையில், திரையரங்குகளில் காலைக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேட்னி காட்சிகளில் இருந்து திரையிடப்படும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

'மாநாடு' படத்துக்கு முன்னதாகவே அசோக் செல்வன் நடிக்கும் புதிய படமொன்றை இயக்கியிருந்தார் வெங்கட்பிரபு. 'மாநாடு' படத்தின் வெற்றிக்குப் பிறகு, இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாரானது. பின்னர், இந்தப் படத்திற்கு 'மன்மதலீலை' எனத் தலைப்பிட்டது படக்குழு. வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மணிவண்ணன் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இப்படத்தில் அசோக் செல்வனுக்கு நாயகிகளாக சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நடித்துள்ளனர்.

பிரேம்ஜி இசையமைத்துள்ள இப்படத்துக்கு தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.பல்வேறு பெரிய பட்ஜெட் படங்கள் வெளியீட்டால், சரியான வெளியீட்டுத் தேதிக்காக காத்திருந்த, 'மன்மதலீலை' படக்குழு இன்று வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், வெங்கட்பிரபுவின் ’மன்மதலீலை’ படத்தை முதல்நாள் முதல் ஷோ பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் இன்று காலைக் காட்சிக்காக வந்திருந்தனர். ஆனால், தமிழகம் முழுவதும் காலைக் காட்சிகள் திரையிடப்படவில்லை. இதனால், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் உள்ள திரையரங்குகளில் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

"தொழில்நுட்பக் கோளாறு காரணமாக படத்தை திரையிடுவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. மன்மதலீலை படம், இன்று மேட்னி காட்சிகளிலிருந்து திரையிடப்படும்" என்று இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராக்போஃர்ட் எண்டர்டெய்ன்மென்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x