

மதத்தால், நிறத்தால், இனத்தால், பாலினத்தால் உலக முழுவதும் பிளவுகள் அரங்கேறிக் கொண்டிருக்கிற வேளையில், ஆஸ்கர் வென்ற 'தி லாங் குட்பை' குறும்படம் நம்மில் ஏற்படுத்தும் தாக்கம் மகத்தானது.
லண்டனின் வெம்ளி பகுதியில் ஆசியக் குடும்பம் ஒன்று திருமண நிகழ்வுக்காக தயாராகிக் கொண்டிருக்கிறது. வீடே பரப்பரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, அந்த இரைச்சல்களுக்கு இடையே சிறுவன் நாஸும், ரிஸ்வானும் (ரிஸ் அகமத்) நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இதைக் கண்ட வீட்டிலிருந்த பெரியவர்கள் சத்தம் போட, வீட்டை சுத்தம் செய்வதற்கான பணியில் இறங்கிய ரிஸ்வானும், நாஸும் அந்த வீட்டின் ஹாலை அடைத்துக் கொண்டிருந்த பெரிய நாற்காலியை மேலே எடுத்துச் செல்ல முடிவு செய்கிறார்கள். குறுகிய படிக்கட்டுகளின் வழியே ரிஸ்வான் நாற்காலியை தூக்கிக் கொண்டுச் செல்ல, ”உங்களுக்கு எல்லாம் ஒரு சர்ப்ரைஸ்” என்று மணப்பெண்ணின் அறையை நாஸ் திறக்கிறான். மாடியிலுள்ள அந்த அறைதான், அந்த வீட்டின் பெரிய அறை. கையில் நாற்காலியுடன் ரிஸ்வானை பார்த்ததும் “இங்கு இடமில்லை, நாற்காலியை இங்கு வைக்க முடியாது... வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்” என்று அங்கிருந்தவர்கள் கூற, ரிஸ்வானோ "இதுதான் இந்த வீட்டின் பெரிய அறை... இங்கேயே வைக்க முடியாதா?" என்று கடிந்துகொண்டு அருகிலுள்ள அறைக்கு நகர்கிறான்.
சிறுவன் நாஸ் அருகே இருந்த சிறிய அறையில் நாற்காலிக்கான இடத்தை ஏற்படுத்திக் கொடுக்க, ரிஸ்வான் அந்த நாற்காலியை அங்கு வைக்கிறான். அப்போது அந்த அறையின் ஜன்னல் வழியே பெரும் அலறல் சத்தமும், துப்பாக்கிச் சூடு சத்தமும் கேட்கிறது. ரிஸ்வான் ஜன்னலை எட்டிப் பார்க்கிறான். உடனே சிறுவன் நாஸை கீழே ’போ’ என்று ரிஸ்வான் கத்தும் நொடியிலேயே ஒரு பெரிய வேன் வேகமாக தன் வீட்டிற்கு முன் வந்து நிற்பதை ரிஸ்வான் பார்க்கிறான்... அந்த நொடியிலிருந்து எல்லாமே மாறுகிறது..!
அனைல் கரியா இயக்கி, ரிஸ் அகமத் எழுதி நடித்த 'தி லாங் குட்பை' (THE LONG GOODBYE), சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. 12 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்தில் ஆரம்பம் தொடங்கி முடிவு வரை அனைத்துக் காட்சிகளும் பரப்பரப்பாக செல்கின்றன. கதையின் எழுத்தாளர் பாகிஸ்தான் - பிரிட்டீஷர் என்பதால் பாகிஸ்தான் - இந்திய கலாச்சாரம் படத்தில் பிரதிப்பலிக்கிறது. இதனால், படம் கலாச்சார ரீதியாக நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. படத்தில் பிரிட்டனைச் சேர்ந்த பாகிஸ்தான் மற்றும் இந்திய வம்சாவளிகள் இணைந்து நடித்துள்ளனர்.
இவ்வாறு 'தி லாங் குட்பை' திரைப்படம் ஆசிய பிரிட்டீஷ் மக்கள், இங்கிலாந்தில் நிலவும் வலதுசாரி இனவெறியால் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள், பிளவுப்படுத்தப்படுகிறார்கள், அம்மக்களின் விசுவாசம் எவ்வாறு ஒவ்வொரு கணமும் கேள்விக்குட்படுத்தப்படுகிறது என்பதை பரப்பரப்பான காட்சிகள், இசை, ராப் பாடல் வழியே பார்வையாளர்களுக்கு கடத்தப்பட்டுள்ளது.
படத்தின் இறுதிக்கட்டத்தில் காலில் குண்டடிப்பட்டு சாலையில் சரிந்து கிடக்கும் ரிஸ்வானிடம், ”நீங்கள் எங்கிருந்து வந்திருக்கிறீர்கள்?” என்று ஒரு குரல் கேட்கும். அந்தக் குரலுக்கு ரிஸ்வான் அளிக்கும் பதில்தான் பார்வையாளர்களுக்கு இப்படம் கூறும் வலுவான செய்தி.
அந்தக் இறுதி காட்சியில் ”நீங்கள் ஏன் என்னை வெறுக்கிறீர்கள்?” என்று சொந்த நாடற்றவர்களின் ஒட்டு மொத்த குரலாகவும் ரிஸ்வான் ஒலிப்பார்.
ஆஸ்கர் மேடையில் கையில் விருதுடன் ரிஸ் அகமத், “இந்த பிளவுபட்ட காலத்தில், ’இவர்கள்’ மற்றும் ‘அவர்கள்’ இல்லை என்பதை நினைவூட்டுவதே கதையின் பங்கு என்று நாங்கள் நம்புகிறோம். இங்கு ‘நாம்’ மட்டும்தான் இருக்கிறது” என்று பேசியிருந்தார். அவரது பேச்சு, உலகம் முழுவதும் அனைவராலும் பாரட்டப்பட்டது.
அவர் கூறியதை போல 'தி லாங் குட்பை' குறும்படம் அவர்கள், இவர்கள் எல்லாம் இல்லை... ’நாம்’ மட்டுமே என்பதை அழுத்தமாக உலக அரங்கில் சொல்லி இருக்கிறது.
மதத்தால், நிறத்தால், இனத்தால், பாலினத்தால் உலக முழுவதும் பிளவுகள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இந்தப் பிளவுகளால் ஒவ்வொரு நாளும் வன்முறைகள் அப்பாவி மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இந்தச் சூழலில் 'தி லாங் குட்பை' போன்ற குறும்படங்களுக்கு ஆஸ்கர் போன்ற உலக அரங்கில் அங்கீகாரம் கிடைத்துள்ளது நிச்சயம் வரவேற்புக்குரியது. நம்பிக்கைக்குரியதும் கூட.
கதையும் களமும் விவரிக்கப்பட்டுவிட்டதே என்ற கவலை வேண்டாம். இங்கே குறிப்பிட்டவற்றைத் தாண்டி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய உள்ளடக்கத்தைக் கொண்டது இந்தக் குறும்படம்.
யூடியூப் தளத்தில் THE LONG GOODBYE’ குறும்படம் காணக் கிடைக்கிறது.
தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in