Last Updated : 16 Mar, 2022 09:42 PM

2  

Published : 16 Mar 2022 09:42 PM
Last Updated : 16 Mar 2022 09:42 PM

முதல் பார்வை | படா - ஒடுக்கப்பட்டவர்களின் நியாயமான கோபத் தெறிப்புகள்!

தங்களின் உயிர்களைவிட சமூகத்தின் விடுதலையே முக்கியமானது என்ற அரசியல் தெளிவு கொண்ட நால்வரின் அதிரடியான 'நிஜ' போராட்டமே மலையாளத் திரைப்படமான 'படா' (Pada).

அக்டோபர் 4, 1996 அன்று, பாலக்காடு கலெக்டர் அலுவலகத்திற்குள் ‘அய்யன்காளி படை’யைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்ட நான்கு பேர் கலெக்டரை சுமார் 10 மணி நேரம் பிணைக் கைதியாக்கினர். அவர்களுக்கு ஒரே ஒரு கோரிக்கை மட்டுமே. 1960-க்குப் பிறகு பழங்குடியின மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட அவர்களின் நிலங்கள் அவர்களுக்கே திருப்பித் தர வேண்டும் என்று 1975-ல் கேரளப் பட்டியல் பழங்குடியினர் சட்டம் இயற்றப்பட்டது. கேரளத்தை ஆண்ட இடது - வலது அரசாங்கங்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்தன.

இறுதியாக, 1996-ல் திருத்தப்பட்ட இந்த சட்டம், பழங்குடியினரின் நிலங்களை அதை கைப்பற்றியவர்களை அனுபவிக்க வழிவகை செய்தது. கேரள சட்டப்பேரவையின் உறுப்பினர் எண்ணிக்கை 140-ல் ஒரேயொரு உறுப்பினரின் எதிர்ப்பை தவிர, மற்றவர்கள் அனைவரும் ஒன்றாக வாக்களித்து நிறைவேறியது இந்த சட்டத் திருத்தம். இந்தத் திருத்தங்களை மாநில அரசு திரும்பப் பெற வேண்டும் என்றே பாலக்காடு கலெக்டரை பிணைக் கைதியாக்கி 'அய்யன்காளி படை'யைச் சேர்ந்த நான்கு பேர் செய்த போராட்டமே கமல் கேஎம் எழுத்து - இயக்கத்தில் திரைவடிவில் 'படா'வாக வந்துள்ளது.

இதே கதையை முன்கதையாக சுருக்கமாக விவரித்து படத்தை தொடங்குகிறார் படத்தின் நாயகர்களில் ஒருவரான குஞ்சாக்கோ போபன். படத்தின் நாயகர்களாக குஞ்சாக்கோ போபன், விநாயகன், ஜோஜூ ஜார்ஜ், திலீஷ் போத்தன். இரண்டு குழந்தைகளின் தகப்பனாக அவர்களின் சிறிய சிறிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் வேளையில், கலெக்டரிடமும், அரசிடமும் காரசாரமான விவாதங்களை எழுப்பும் பாலுவாக விநாயகனும் சரி, லாட்டரி விற்கும் மூதாட்டி தொந்தரவு செய்யும்போது தனது நிலையை எடுத்துச்செல்லும் நபராக, நினைவாற்றலை இழந்த தாய் ஒருவருக்கு போராட்டத்தின் உஷ்ணத்துக்கு மத்தியில் உதவ முற்படும் அரவிந்தனாக ஜோஜு ஜார்ஜும் சரி, பழைய கேஸ் ஒன்றில் போலீஸ் தன்னை பிடித்தபோதும் தங்களின் திட்டத்தை அறிந்துவிடாமல் மறைக்கும் நேரங்களிலும், கலெக்டரை பிணைக் கைதியாக்க தேவையான செயல்பாடுகளை செய்யும் ராகேஷாக குஞ்சாக்கோ போபனும் சரி, தங்களின் திட்டத்தை அறிந்த மனைவியை சமாதானப்படுத்துவதில் மும்முரமாக இருக்கும் குட்டியாக வரும் திலீஷ் போத்தனும் சரி தங்களின் தேர்வு சரி என்பதை ஒவ்வொரு ஃபிரேமிலும் தேர்ந்த நடிப்பின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள்.

மற்றொரு முக்கிய நடிகர் பிரகாஷ் ராஜ். தலைமைச்செயலாளர் கதாபாத்திரம் அவருக்கு. சீரியஸான பிரச்சினையை கையாளும் பொறுமைமிகுந்த அதிகாரியாக , அட்டப்பாடி பகுதிகளில் பழங்குடி சமூகம் கடந்த 36 வருடங்களாக எந்தவித முன்னேற்றமும் இல்லாமல்இருக்கின்றனர் என்பதை தனது பாத்திரத்தின் மூலம் பார்வையாளர்களுக்கு கடத்துகிறார் பிரகாஷ் ராஜ். ஷைன் டாம் சாக்கோ, ஜேம்ஸ் எலியா, இந்திரன்ஸ், சலீம், உன்னிமய பிரசாத், கனி குஸ்ருதி, கோபாலன் என முக்கிய நடிகர்கள் சில சீன்களே வந்து சென்றாலும், தங்களின் ஸ்கிரீன் பிரசென்ஸ் நேரத்தையும் பொருட்படுத்தாமல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

உறுதுணை பாத்திரத்தில் மற்றவர்களை விட அதிகம் ஈர்ப்பது கலெக்டர் அஜய் டாங்கேவாக வரும் அர்ஜுன் ராதாகிருஷ்ணன். ஓர் உயர் அதிகாரியின் தொனி, மன அழுத்தம், பொறுப்பு என பக்காவாக பாத்திரத்துக்கு ஏற்ப வெளிப்படுத்தி கலெக்டர் அஜய் டாங்கேவாக பொருந்தி இருக்கிறார்.

படாவின் முக்கிய பலம் ஒளிப்பதிவு எனலாம். படாவை மிகவும் யதார்த்தமான படைப்பாக தனது கேமரா கண்களால் சாத்தியப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் சமீர் தாஹிர். கதைக்கு தேவையான மனநிலைக்கு பொருந்தும்படியான் அவரின் ஷாட் வடிவமைப்பு நம்மை தொடர்ந்து கதையுடன் இணைக்கிறது. லிஜுவின் எடிட்டிங்கும், விஷ்ணு விஜய்யின் இசையும் இதேபோல் தனித்து தெரிகின்றன.

இந்த மாதிரியான கதையில், திரைக்கதை கொஞ்சம் பிசிறாக இருந்தாலும் அது ஆவணப்படமாக மாறிவிடும். ஆனால், 'படா' படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் அதன் திரைக்கதையே. அய்யன்காளி படையின் நோக்கம், அவர்களை போராட தூண்டிய பழங்குடியினரின் பிரச்னைகள், சட்ட நிலைப்பாடுகள், கலெக்டரை பிணைக் கைதியாக்கினால் போலீஸ், மத்திய, மாநில அரசுகள் தரப்புகள் வெளிப்படுத்தும் எதிர்வினைகள், மத்தியஸ்தம், நீதிமன்றத்தின் செயல்பாடுகள், பிணைக் கைதியாக்கப்பட்ட கலெக்டர் மட்டுமில்லாமல், போராட்டத்தை நடத்தும் நால்வரின் குடும்பங்கள், அவர்களின் நியாயமான பயம், உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை தேவைகள் என அனைத்து விஷயங்களையும் சரியான ரீதியில் கொண்டு, அய்யன்காளி படையின் போராட்டத்தின் சாரத்தை கொஞ்சமும் மாற்றாமல், அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் கமல் கேஎம்.

தேவையில்லாத சீன்களோ, ஃபிளாஷ்பேக் சம்பவங்களோ இல்லாமல் பிரதானப்பட்ட நான்கு பேர் அவர்களின் குடும்பங்களின் காட்சிகள் என திரைக்கதையை மிகவும் கிரிஸ்ப்பாக கொண்டு சொல்ல வந்தவையை தெளிவாக சொல்லி இருக்கிறார். 'இங்கே பிணைக் கைதியாக நீங்கள் இருக்கலாம், ஆனால், யதார்த்தத்தில் பிணைக் கைதிகள் ஒடுக்கப்பட்ட மக்கள் தான்' என்பது போன்ற வசனங்களும், அன்றைய காலகட்டத்தில் நடந்த சிறிய விவரங்கள் கூட மாறாமல் அப்படியே காட்டியிருப்பது ஒவ்வொரு நொடியும் படத்துடன் நம்மை ஒன்ற வைக்கிறது.

ஷைன் டாம் சாக்கோ, ஜெகதீஷ் இருவரின் நடிப்பு தனித்து தெரியாதது, வெடிகுண்டு காட்சியின் குறைகள் போன்றவை குறையாக இருந்தாலும் கமல் கேஎம்மின் எழுத்தும் மேக்கிங்கும், எடுத்துக்கொண்டுள்ள பிரச்னையும் அதனை மறைக்க வைக்கின்றன. படா திரைப்படம் குரலற்றவர்களுக்கு குரலாக, அரசு அமைப்பு பின்தங்கியவர்களின் நன்மைகளை எப்படி சுரண்டுகிறது அல்லது புறக்கணிக்கிறது என்பதை வெளிச்சமாக்குவதோடு, 1996-ல் 'அய்யன்காளி படை' எதற்காக போராட்டத்தை நடத்தியதோ, அந்த அவசியத்தை மீண்டும் ஒருமுறை 'படா' சினிமாவாக நிறைவேற்றியுள்ளது.

போராட்டத்தின் முடிவுகள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தும், விறுவிறுப்பான காட்சிகள், மேக்கிங், கமல் கேஎம்மின் எழுத்து ஆகியவை இந்தப் படத்தை பார்க்க தூண்டுகின்றன.

அரசின் பக்கம் சாயாமல் முழுக்க முழுக்க ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகவே ஒலிக்கும் "படா" சமகால வரலாற்றில் முக்கியச் திரைச்சித்திரமாக தனித்து நிற்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x