

'கள்ளன்’ திரைப்படத்தின் பெயரை மாற்றக் கோரிய வழக்கில் திரைப்பட தணிக்கை வாரியம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், மேலூர் கள்ளர் பண்பாட்டு மையத் தலைவர் கலைமணி அம்பலம் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: மதியழகன் தயாரிப்பில், சந்திரா இயக்கத்தில், கரு.பழனியப்பன் நடிக்கும் திரைப்படத்துக்கு ‘கள்ளன்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து போராடியவர்கள் கள்ளர் சமூகத்தினர். தமிழகம் முழுவதும் இச்சமூகத்தினர் 40 லட்சம் பேர் வசிக்கின்றனர். இந்த சமூகத்தினரை முதலில் அரசு ஆவணங்களில் கள்ளன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் கள்ளர் என மாற்றப்பட்டது. இப்பெயரிலேயே சாதிச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கொள்ளைக் கூட்டத்தின் செயல்பாடுகள் அடிப்படையில் ‘கள்ளன்’ என்ற பெயரில் படம் எடுக்கப்பட்டுள்ளது. இது அச்சமூகத்தின் பெயரைக் களங்கப்படுத்தும் செயலாகும். இப்படம் அச்சமூகத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இது சட்டம்- ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்தும். எனவே, ‘கள்ளன்’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள படத்தை வெளியிடத் தடை விதித்து, படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், 'கள்ளன்' திரைப்படம் மார்ச் 18-ல் வெளியாகிறது. படம் வெளியானால் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும். எனவே, திரைப்படத்தின் பெயரை மாற்ற உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து இம்மனு தொடர்பாக திரைப்பட வளர்ச்சிக் கழகம், திரைப்படத் தணிக்கை வாரிய மண்டல இயக்குநர், டிஜிபி, தயாரிப்பாளர் மதியழகன், இயக்குநர் சந்திரா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு நீதிபதி விசாரணையை ஒத்திவைத்தார்.