'மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை' - திருமணம் குறித்து மஞ்சிமா மோகன்

'மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை' - திருமணம் குறித்து மஞ்சிமா மோகன்
Updated on
1 min read

தனது திருமணம் குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு நடிகை மஞ்சிமா மோகன் விளக்கம் அளித்துள்ளார்.

மலையாள நடிகை மஞ்சிமா மோகன். மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் 1997 முதல் 2001 வரை குழந்தை நட்சத்திரமாக எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு நிவின் பாலியுடன் நடித்த ‘ஒரு வடக்கன் செல்ஃபி’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நிறைய படங்களில் நடித்துவருகிறார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் இவர் விஷ்ணு விஷால் உடன் இணைந்து நடித்த எப்ஐஆர் சில வாரங்கள் முன் வெளியானது.

இதனிடையே, சில தினங்கள் முன் மஞ்சிமா தமிழ் சினிமாவின் இளம் நடிகர் ஒருவரை காதலித்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த தகவலை மறுத்துள்ளார் மஞ்சிமா மோகன். மலையாள ஊடகம் ஒன்றுக்கு பேசிய அவர், "3 வயதில் சினிமாவுக்கு வந்தேன். என் வாழ்க்கையில் நடந்த எந்த முக்கிய சம்பவங்களையும் மக்களிடம் இருந்து மறைத்ததில்லை. எனது வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு மகிழ்ச்சியையும் பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்வதை விரும்புபவள் நான். அது சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும். என் வாழ்க்கையில் திருமணம் போன்ற பெரிய நிகழ்வை யாரிடமும் மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

இந்த செய்தியை வெளியிட்டவர் என்னிடம் அதை கேட்டபோது நான் மறுக்கவே செய்தேன். ஆனால் அவர் தொடர்ந்து அதை வெளியிட்டார். அது எனக்கு வேதனையை ஏற்படுத்தியது. அதன்பின் அதை கண்டுகொள்ளவில்லை. இந்த விஷயத்தில் என் பெற்றோரின் எதிர்வினை குறித்து என்னவாக இருக்கும் என்பதே எனது பதட்டத்துக்கு காரணமாக இருந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in