Published : 08 Mar 2022 11:19 AM
Last Updated : 08 Mar 2022 11:19 AM

இயக்குநர் பாலா விவாகரத்து: 17 ஆண்டுகால திருமண உறவை முறித்த தம்பதி

சேது, நந்தா, பிதாமகன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் பாலா தனது மனைவியைப் பிரிந்தார். இருவருக்கும் மார்ச் 5ல் விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது.

இயக்குநர் பாலா தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துமலரை கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 5ல் திருமணம் செய்து கொண்டார். மதுரையில் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குப் பிரார்த்தனா என்ற மகள் உள்ளார்.

17 ஆண்டுகளாக திருமண பந்தத்தில் இணைந்திருந்த இத்தம்பதியினர் கடந்த 4 ஆண்டுகளாகவே பிரிந்து வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இருவருமே விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் மார்ச் 5ஆம் தேதியன்று இருவருக்கும் சென்னை குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது.



தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குநர்கள் சாதனை படைத்திருக்கிறார்கள். ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார்கள். தலைமுறைகளைக் கடந்து ரசிக்கப்படும் திரைக் காவியங்களைப் படைத்திருக்கிறார்கள். ஆனால், வெகுசில இயக்குநர்கள் மட்டுமே தேசிய அளவில் கவனம் ஈர்த்திருக்கிறார்கள். அதுவும் இந்தி உள்ளிட்ட அதிக மக்கள் பேசும் மொழிப் படங்களை இயக்காமலே இந்தி சினிமா ஆளுமைகளின் மதிப்பைப் பெறுவது சாதாரண விஷயம் அல்ல. அத்தகு அங்கீகாரத்தை தன் வெகுசில படங்கள் மூலமாகவே பெற்றிருப்பவரான இயக்குநர் பாலா.

1999-ல் வெளியாகி தமிழ் சினிமா வரலாற்றில் காவிய அந்தஸ்தைப் பெற்ற 'சேது' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்தின் மிகப் பெரிய வெற்றி பல ஆண்டுகளாக திரைத்துறையில் உரிய இடம் கிடைக்காமல் போராடிக்கொண்டிருந்த நடிகர் விக்ரமுக்கு திருப்புமுனையாக அமைந்தது. ஒரு இயக்குநராக தேசிய அளவில் தமிழ் சினிமாவுக்குப் பெருமை தேடித்தந்தவர் ஒரு தயாரிப்பாளராக தரமான தமிழ்ப் படங்களை அளித்தவர், நடிகர்களின் சிறந்த நடிப்பைப் பெறும் ஜாலம் தெரிந்தவர், ரசிகர்களின் பெருமதிப்பைப் பெற்ற படைப்பாளி பாலா. அவருடைய திடீர் விவாகரத்து திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x