Published : 05 Mar 2022 08:18 PM
Last Updated : 05 Mar 2022 08:18 PM

சிம்புவின் ஒத்துழைப்பால் அசாதாரணப் படமாக மாறியது ‘மாநாடு’ - தயாரிப்பாளர் நெகிழ்ச்சி

சிம்புவின் ஒத்துழைப்பால் அசாதாரணப் படமாக மாறியது ‘மாநாடு’ என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மாநாடு'. இந்தப் படத்துக்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும், இந்தப் படம் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் ஆகவுள்ளது. நவம்பர் 25-ம் தேதி வெளியான ‘மாநாடு’ நேற்று (மார்ச் 4) 100-வது நாளைக் கொண்டாடியது. இன்னும் இந்தப் படம் கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் திரையிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தனது தயாரிப்பில் வெளியாகி 100-வது நாளை எட்டியுள்ள ‘மாநாடு’ படம் குறித்து சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "எண்ணித் துணிக கருமம் என்ற வள்ளுவன் நமக்கு எப்போதுமே சிறந்த மோட்டிவேட்டர். தயங்கி நிற்கும்போதெல்லாம் "துணிந்து இறங்கு" எனத் தட்டிக் கொடுப்பவர். துணிந்து இறங்கிச் செய்த படம் "மாநாடு" . இன்று தன்னம்பிக்கையின் உச்சமாய் நூறாவது நாளைத் தொட்டிருக்கிறது. சமீபகாலமாக 100-வது நாள் கடலில் போட்ட பெருங்காயமாய் கரைந்தே போய்விட்டது. ஆனால், நான்கு நாட்களில் திரையரங்கிலிருந்து படத்தைத் துரத்திவிடும் இந்நாட்களில் "மாநாடு" தரமான வெற்றியை, மகிழ்ச்சியை தமிழ் சினிமாவோடு பகிர்ந்திருக்கிறது.

வெற்றி என்பது சாதாரணமல்ல. பல நல்ல உள்ளங்களின் கூட்டு உழைப்பு. இப்படம் 100 நாட்களைத் தொடக் காரணமான இயக்குநர் வெங்கட் பிரபு, சிலம்பரசன் டி.ஆர், எஸ். ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், இயக்குநர் எஸ் ஏ சி, வாகை சந்திரசேகர், ஒய் ஜி மகேந்திரன், பிரேம்ஜி, உதயா, மஹத், அஞ்சனா கீர்த்தி, கருணாகரன், பஞ்சு சுப்பு, மனோஜ் கே பாரதி, அரவிந்த் ஆகாஷ், டேனி உட்பட்ட அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

யுவன் ஷங்கர் ராஜா ஒரு ராஜாங்கமே செய்துவிட்டார். அவருக்கு என் நன்றிகள். அசாத்திய தொழில் நுட்பங்களோடு அசத்திய ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன், கே எல் பிரவீண், சண்டைப்பயிற்சியாளர் சில்வா, கலை இயக்குநர் உமேஷ் ஜே குமார், ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர், விளம்பர வடிவமைப்பு ட்யூனி ஜான் ஆகியோர் மாநாடு படத்தின் பலமாக நின்றார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படத்தின் உதவி இயக்குநர்கள் முதல் விநியோகஸ்தர்கள் வரையில் அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர், "சாதாரண படமாகத் தொடங்கினேன். இரண்டு வருட கரோனா இடைவெளி யாவையும் தாண்டி என்னோடு பயணித்த சிலம்பரசன் இப்படத்திற்குக் கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாதது. அதனால் மட்டுமே இது அசாதாரணப் படமாக மாறியது. உடல் எடை குறைத்து புதிய நபராக இப்படத்தில் தோன்றி மக்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார் என்பதே உண்மை.

மிக முக்கியமாக, மாநாடு படத்தின் வெற்றி மேஜிக்காக மாறிய எஸ்.ஜே சூர்யாவுக்கு என் மானசீக நன்றி. வெங்கட் பிரபுவின் அயராத உழைப்பும், இயக்கமும் ஒரு தெளிவான வெற்றியைத் தேடித் தந்தது. இவர்களால் இன்று மாநாடு நூறு நாட்களைத் தொடுகிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நேற்று 100-வது நாளை முன்னிட்டு கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் ‘மாநாடு’ படம் பார்த்தார் சிலம்பரசன். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x