Published : 01 Mar 2022 09:31 PM
Last Updated : 01 Mar 2022 09:31 PM

Yuvan 25 | இந்த யுவன் சூழ் இசையுலகு இப்படியேதான் தொடராதா..!

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா திரையுலகிற்கு வந்து 25 ஆண்டுகளாகிவிட்டன. இந்த 25 ஆண்டுகளில் யுவன் இசையமைத்தது வேண்டுமென்றால், நூறு படங்களைக் கடந்திருக்கலாம். ஆனால், அவர் இசையமைப்பில் வெளிவந்த பல பாடல்கள் பல நூற்றாண்டுகள் கடந்தும் பேசும் தன்மைக் கொண்டவை என அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுபவை.

அரவிந்தனில் அறிமுகம்: தமிழ் திரைப்பட உலகில், 90-களின் பிற்பகுதி, இளைஞர்களுக்கானதாகவே இருந்தது. 1992-ம் ஆண்டு இயக்குநர் மணிரத்னத்தின் 'ரோஜா' திரைப்படத்தின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருந்தார். ரஹ்மான் அறிமுகமான 5 ஆண்டுகளுக்குப் பின்னர், 1997-ம் ஆண்டு 'அரவிந்தன்' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் தனது இசை பயணத்தை தொடங்கினார் யுவன். அப்போது அவருக்கு வயது 16.

'அரவிந்தன்' திரைப்படத்தில் மொத்தம் 7 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. அதில், எஸ்.பி.பி மற்றும் மகாநதி ஷோபனா, பாடிய "ஈர நிலா விழிகளை மூடி" பாடல் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு இசையமைப்பாளராக ஒரு நல்ல தொடக்கமாக அமைந்தது. ஆனால், அந்தப் படம் வெளியாகி சில ஆண்டுகள் வரை யுவனுக்கு பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. அந்த திரைப்படத்தைத் தொடர்ந்து அவர் இசையமைத்த சில படங்கள் தோல்வியடைந்ததால், பெரிதாக யாரும் யுவனை கண்டுகொள்ளவில்லை.

பூவெல்லாம் கேட்டுப்பார்: இந்நிலையில் தான் 1999-ம் ஆண்டு இயக்குநர் வஸந்தின் 'பூவெல்லாம் கேட்டுப்பார்' திரைப்படம் வெளியானது. இந்தப் படம் ஒரு மியூசிக்கல் காதல் பாடம் என்பதால், படத்தில் மொத்தம் 8 பாடல்கள். அதிலும், 'சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே' பாடலும், 'இரவா பகலா வெயிலா மழையா' பாடலும் , தமிழ் ரசிகர்களுக்கு புதுவித அனுபவமாக இருந்தது.

இந்த திரைப்படத்தின் பாடல்கள் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது. விமர்சன ரீதியாகவும் யுவனுக்கு இந்தப் படத்தின் பாடல்கள் பெரிய அளவில் பெயர் வாங்கி தந்தது.

2000-ல் தொடங்கிய யுவனிசம்: பின்னர் இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான 'உனக்காக எல்லாம் உனக்காக' படம் வெளியானது. நகைச்சுவை படமான இந்தப் படத்தில் யுவனின் இசை முக்கியப் பங்கு வகித்தது. தனக்கு பிடித்த பாணியில் இசையமைக்க வேண்டும் என்று, 'அன்னக்கிளி' படத்தில் அறிமுகமான யுவனின் தந்தை இளையராஜாவுக்கு சில ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் '16 வயதினிலே' திரைப்படம் கிடைத்தது போல யுவனும் காத்திருந்தது அதுபோன்ற ஒரு தருணத்துக்காகத்தான். இந்நிலையில்தான் தமிழ் திரையுலகில், தனது அறிமுக படத்தை இயக்க வந்த ஏ.ஆர்.முகருகதாஸ் உடன் இணைந்தார் யுவன். அதுதான் தற்போது ஏகே அழைக்கப்படும் அஜித்தை "தல" என இந்த தமிழகம் தூக்கிக் கொண்டாட தொடங்கிய 'தீனா' திரைப்படம்.

இப்போது கூட இந்தப் படத்தின் பாடல்களை கேட்டுப்பாருங்கள், பாடல்களின் பின்னூட்ட இசையில், யுவனின் இசை அறிவு உங்களை மெய் சிலிர்க்க செய்யும். 'காதல் வெப்சைட் ஒன்று, நீயில்லை என்றால்', 'சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்', 'வத்திக்குச்சிப் பத்திக்காதுடா' பாடல்களும் சரி, 'தினக்கு தினக்கு தின தீனா' என்ற ரீரெக்கார்டிங் இசையிலும் சரி பின்னி பெடலெடுத்திருப்பார் யுவன்.

'தீனா' வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பாலாவுடன் கைகோத்தார் யுவன். வித்தியாசமான கதையம்சம் கொண்ட 'நந்தா' படத்தின் பின்னணி இசை யுவன் ஷங்கர் ராஜாவுக்கு மிகப்பெரிய பெயர் வாங்கித் தந்தது. இதில் வரும் 'முன்பனியா முதல் மழையா' பாடலை மறந்தவர் இருக்கக்கூடுமா என்ன?

செல்வன் யுவன் கம்போ ஸ்டார்ட்ஸ்: இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் 'துள்ளுவதோ இளமை' படத்தில் கமிட்டான யுவனுக்கு, அந்தப் படத்தில் கதையாசிரியரும், கஸ்தூரி ராஜாவின் மகனுமான செல்வராகவனின் நட்பு கிடைத்தது. இருவரும் இணைந்து பணியாற்றிய இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும், பாடல்களும் மிகப்பெரிய பலமாக அமைந்ததன. பதின்பருவத்து பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட கதையால் ஏற்படும் சறுக்கல்கள் அனைத்தையும் தாங்கிப் பிடித்தது யுவனின் இசைதான்.

குறிப்பாக, 'இது காதலா முதல் காதலா' பாடல், 'தீண்ட தீண்ட', 'வயது வா வா அழைக்கிறது', 'நெருப்புக் கூத்தடிக்குது', 'கண்முன்னே எத்தனை நிலவு' உள்ளிட்ட பால்கள் அந்த சமயத்தில் எப்ஃஎம்மிலும், டிவியிலும் ஒளிபரப்பாகிக் கொண்டேயிருக்கும். இதன் பின்னர், செல்வராகவன்-யுவன் கூட்டணியில் வெளியான அத்தனைப் படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் ரகம். 'காதல் கொண்டேன்', '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை' என அதிரடி சரவெடியாய் இந்தக் கூட்டணி வெற்றிகளையும், அக்காலக்கட்டத்தின் இளைஞர்களின் இசை ரசனையையும் அறுவடைச் செய்தது. குறிப்பாக, இந்த 3 திரைப்படங்களின் பின்னணி இசையால், திரையுலகில் கூர்ந்து கவனிக்கப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவர் என்ற நிலையைப் பெற்று தந்தன.

இளமைப் பட்டாளம்: யுவனின் இசை 2000-களில் தங்களது இளமைப் பருவத்திலிருந்த இளைய சமூகத்தினரின் கொண்டாட்டக் களமாக மாறியிருந்தது. முக்கியமாக அந்தக் காலக்கட்டத்தில் கல்லூரிகளில் படித்த கல்லூரி மாணவர்களிடம் யுவனின் இசைக்கு தனி வரவேற்பு இருந்து வந்தது. இந்த நிலையில் இயக்குநர் அமீருடன் 'மௌனம் பேசியதே' படத்தில் இணைந்து யுவன் பணியாற்றியிருந்தார். பாடல்கள் அனைத்து சூப்பர் ஹிட், படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. 'ஏப்ரல் மாதத்தில்', 'தாஸ்', 'மன்மதன்', 'வல்லவன்', 'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது', 'புன்னகைப் பூவே', 'அறிந்தும் அறியாமலும்', 'ராம்', 'சண்டக்கோழி', 'பையா', 'பில்லா', 'பில்லா 2', 'சென்னை-28', 'மங்காத்தா', என யுவன் தொட்டதெல்லாம் ஹிட்டு தான் என்ற நிலையில், அவர் இசையமைத்த பல படங்கள் வணிக ரீதியாக பெரு வெற்றி பெற்றதுடன் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு அப்போதைய இளமைப்பருவத்தினரிடம் பெரும் பாராட்டுக்களையும் பெற்றதுத் தந்தன.

திருப்புமுனை: திரையுலகில் சில படங்கள் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்கச் செய்யும் அப்படியான சில படங்களில் யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை பல மாயாஜாலங்களைச் செய்திருக்கும். அதற்காக அந்தத் திரைப்படங்களில் பாடலுக்கு எந்த குறையும் இல்லாமல், அதிலும் பிரித்து மேய்ந்திருப்பார் யுவன். அப்படியான சில திரைப்படங்கள் இவை.

ராம்: இயக்குநர் அமீரின் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம், மனநிலை பிறழ்வு கொண்ட மகனின் பாசப்போராட்டம் குறித்த கதையம்சம் கொண்டது. க்ரைம் த்ரில்லர் சஸ்பென்ஸ் ரகத்தைச் சேர்ந்த இந்த படத்துக்கு யுவன் தனது பின்னணி இசை மட்டும் தாலாட்டுப் பாடல்களால் மனம் வருடியிருப்பார்.

பருத்திவீரன்: இந்திய இயக்குநர்கள் பலரும் இன்றுவரை பாராட்டும் படங்களில் ஒன்றாக பார்க்கும் இந்த படம் யுவனுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுத்தந்தது. அதுவரை யுவன் கல்லூரி மாணவர்கள், நகரத்து இளைஞர்களுக்கான இசையமைப்பாளராக அறியப்பட்டு வந்தார். இந்த முத்திரையை தட்டித்தூக்கி பட்டித் தொட்டியெங்கும் யுவனைக் கொண்டு சேர்த்தப் படம் 'பருத்திவீரன்'. இப்படத்தில் வரும் பாடல்களும் பின்னணி இசைக்கு சளைத்தது அல்ல.

கற்றது தமிழ்: இயக்குநர் ராமின் முதல் படம். தமிழ்நாட்டில் தமிழ் படித்த இளைஞன் படும் பாடுகளைக் கொட்டித் தீர்த்திருப்பார் இயக்குநர். இந்தப் படத்துக்கு யுவனின் இசைதான் உயிரோட்டமாக இருக்கும். படம் முழுக்க ராமின் கதையும், யுவனின் இசையும் ஒன்றென கலந்து பயணித்திருக்கும். இதே கூட்டணியில் வெளிவந்த 'தங்கமீன்கள்' படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. "ஆனந்தயாழை மீட்டுகிறாள் பாடல்" தமிழகத்தில் பெண் குழந்தைகளைப் பெற்ற தந்தைகளின் தேசிய கீதமாகிப் போனது.

மங்காத்தா: தனது அண்ணன் வெங்கட்பிரபுவின் அனைத்துப் படங்களுக்கும் யுவன் இசையமைத்திருந்தாலும், 'மங்காத்தா' தீம் மியூசிக் தமிழ் திரையுலகில் நிலைத்து நின்று தனித்து ஆடியது. வணிக ரீதியான படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவரான வெங்கட்பிரபு 'மங்காத்தா'வில் யுவனுடன் சேர்ந்த ஆடிய ஆட்டத்தால், கோடம்பாக்கமே திக்குமுக்காடியது.

சண்டக்கோழி: இயக்குநர் லிங்குசாமியின் 'சண்டக்கோழி' முதல் பாகம் வெளியாகி சக்கைப்போடு போட்டது. ஆக்சன் அவதாரம் எடுத்து வானுக்கும் பூமிக்கும் பைஃட்டர்களை பறக்க விட்டுக்கொண்டிருந்த விஷாலோடு, 'தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு' ஆட்டம் போட செய்தார் யுவன். இதன்பிறகு லிங்குசாமி கூட்டணியில் வந்த 'பையா' திரைப்படமும் யுவனுக்கு மியூசிக்கல் ஹிட்டாக அமைந்தது.

பில்லா: இயக்குநர் விஷ்ணு வர்தனுடன் 'அறிந்தும் அறியாமலும்' படத்தில் இணைந்த யுவன் ஷங்கர் ராஜா. அதன்பின்னர் வெளிவந்த அவரது அனைத்து படங்களுக்கும் இசையமைத்தார். ரஜினிகாந்த் நடித்த 'பில்லா' படத்தை தழுவி எடுக்கப்பட்ட புதிய பில்லாவில் அஜீத் நடித்திருந்தார். படத்தின் பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி யுவன் ராஜாங்கம் செய்திருப்பார். இவர்கள் கூட்டணியில் வெளியான பட்டியல் திரைப்படம் யுவனுக்கு இன்னுமொரு முக்கியமான படமாக அமைந்தது.

நான் மகான் அல்ல: இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம், ஒரு சாதரண இளைஞனின் குடும்பத்தில் சமூக விரோதிகளால் ஏற்படும் பிரச்சினைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். படத்தின் உண்மைத்தன்மைக்கு ஏற்ப யுவன் ஷங்கர் ராஜாவின் இசை அத்தனை கச்சிதமாகப் பொருந்திப் போயிருக்கும். பாடல்கள் சொல்லவே வேண்டாம். எல்லா பாடல்களுமே அதிரி புதிரி ரகம்.

நா.முத்துக்குமார் - யுவன்: மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார்தான் யுவன் ஷங்கர் ராஜாவின் பிரதான கவிஞர். யுவனின் அனைத்து ஹிட் பாடல்களையும் எழுதியவர் நா.முத்துக்குமாராகத்தான் இருப்பார். இந்த இரண்டு பேர் காம்போவில், தமிழ் திரையுலகம் மட்டும் இல்லாது, பாடல்களைக் கேட்ட அனைவருமே சொக்கித்தான் போயினர்.

தேவதையைக் கண்டேன், காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன், நினைத்து நினைத்துப் பார்த்து, காதல் வளர்த்தேன், ஏனோ கண்கன், போகாதே போகாதே, பறவையே எங்கு இருக்கிறாய், எங்கேயோ பார்த்த மயக்கம், வெண்மேகம் பெண்ணாக... இப்படியாக பட்டியல் இன்னும் பெரிதா நீண்டு கொண்டே போகும்.

\தனது தனித்திறமையாலும், மாறுபட்ட இசையமைப்பாலும், தனக்கே உரிய யுனிக்கான குரலாலும் 25 ஆண்டுகள் திரைத்துறையில் கடந்திருக்கும் யுவனின் பாடல்களும் இசையும் நூறாண்டுகள் பேசப்படும். இந்தப் பயணம் இப்படியே தொடரும்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x