Published : 28 Feb 2022 06:53 PM
Last Updated : 28 Feb 2022 06:53 PM

காயங்களுக்கு மருந்து போடுவதே முதல் வேலை: இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் வென்ற ஆர்.கே.செல்வமணி

"காயங்களுக்கு மருந்து போடுவதுதான் முதல் வேலை" என்று இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். இதில் தலைவராக பணியாற்றி வந்த ஆர்.கே.செல்வமணியின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்யத் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆர்.கே.செல்வமணி தலைமையில் ஒரு அணியும், கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டார்கள்.

சென்னையில் உள்ள தாய் சத்யா பள்ளி வளாகத்தில் நேற்று (பிப்ரவரி 27) தேர்தல் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் மாதேஷ் மற்றும் எழில் ஆகியோர் துணைத் தலைவர்களாகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்கள். இதர பதவிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி மற்றும் பாக்யராஜ் அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி இருந்தது. இரண்டு அணிகளுமே ஒருவர் மீது ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். இதனால், இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உருவானது.

இதில் நேற்று மாலை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஆர்.கே.செல்வமணி 955 வாக்குகள் பெற்று மீண்டும் தலைவராக வெற்றி பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட பாக்யராஜ் 566 வாக்குகள் பெற்றார். செயலாளராக ஆர்.வி. உதயகுமார், பொருளாளராக பேரரசு, இணைச் செயலாளர்களாக ஏகம்பவாணன், லிங்குசாமி, ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள். சரண், ஏ.வெங்கடேஷ், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட 12 பேர் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.கே.செல்வமணி, “முதன்முறையாக இது கடுமையான தேர்தலாக இருந்தது. ஏனென்றால் அனைவருமே பிரபலங்கள். ஆகையால் இது முக்கியமான தேர்தல். இதில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தேர்தல் முடியும் வரை மட்டுமே தனி அணிகளாக இருந்தோம். அது முடிந்துவிட்டதால் நாங்கள் அனைவருமே இயக்குநர்கள் சங்க அணிதான். எங்களுக்குள் எந்த வேறுபாடும் இருக்காது. சின்ன சின்ன காயங்கள் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கு மருந்து போடுவது தான் முதல் வேலை. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் இயல்பாகவே நிறைவேறும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x