Published : 24 Feb 2022 12:39 PM
Last Updated : 24 Feb 2022 12:39 PM

‘பீம்லா நாயக்’ படத்துக்கு கூடுதல் கட்டணம் - திரையரங்க உரிமையாளர்களுக்கு ஆந்திர அரசு எச்சரிக்கை

‘பீம்லா நாயக்’ படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்று திரையரங்க உரிமையாளர்களை ஆந்திர அரசு எச்சரித்துள்ளது.

ஆந்திர அரசு சில மாதங்களுக்கு முன்பு திரையரங்குகளுக்கு புதிய டிக்கெட் விலையை நிர்ணயம் செய்தது. அதன்படி, சினிமா அரங்குகளின் இருக்கை எண்ணிக்கையைப் பொறுத்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. கிராமப்புறம், நகரப்பகுதிகளில் உள்ள தியேட்டர்களுக்கு ஒவ்வொரு விகிதத்திலும் கட்டணம் விதிக்கப்பட்டது. ஏசி வசதி கொண்ட சாதாரண தியேட்டர்கள் ரூ.150 வரையிலும், மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அதிகபட்சமாக ரூ.250 வரையிலும், ஐமேக்ஸ் போன்ற பெரிய திரையரங்குகள் ரூ.300 வரையிலும் ஜிஎஸ்டி இல்லாமல் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பராமரிப்புக் கட்டணமாக ரூ.3 முதல் 5 வரை தனியாகக் கட்டணம் வசூலிக்கலாம் என்று ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்தக் கட்டண உயர்வால் ஆந்திராவில் பல்வேறு திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன. இந்த விவகாரம் தெலுங்கு திரையுலகம் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சிரஞ்சீவி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனிடம் டிக்கெட் விலையை குறைக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும் ஆந்திர அரசு தனது முடிவில் உறுதியாக இருந்து வருகிறது.

இந்நிலையில், வரும் பிப்.25 அன்று ‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கான ‘பீம்லா நாயக்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் பவன் கல்யாண், ராணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சிறப்புக் காட்சிகள் எதுவும் திரையிடக் கூடாது என்றும், அரசு நிர்ணயித்துள்ள டிக்கெட் விலையை தாண்டி கூடுதல் தொகையை வசூலிக்கக் கூடாது என்றும் ஆந்திர அரசு திரையரங்க உரிமையாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x