Last Updated : 12 Apr, 2016 05:36 PM

 

Published : 12 Apr 2016 05:36 PM
Last Updated : 12 Apr 2016 05:36 PM

இசை விமர்சனம்: 24 - மெய் நிகர் அனுபவத்துடன் ரீங்காரமும் ரிங்டோனும்!

தமிழ் திரையிசை உலகில் கால்பதித்து 24 ஆண்டுகளை தொட்டிருக்கும் இதே ஆண்டில் ‘24’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருப்பது ஒரு சுவையான பொருத்தம்.

நேரத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் உயிர் துடிப்பான ‘காலம் என் காதலியோ’ பாடல் ஏற்கெனவே வெளியாகி ஒரு வலம் வந்துவிட்டது. ‘ஐன்ஸ்டீன்-ஐ மாற்ற வந்த ஆனந்த பேரொளியோ’ எனும் வைரமுத்துவின் அறிவார்ந்த வரிகளைக் கொண்ட இப்பாடல் வெளியிடப்பட்டதும் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பிறந்த நாளான மார்ச் 14-ல்தான். நேற்று படத்தின் முழு இசை ஆல்பமும் வெளியாகியிருப்பது இசைப் புயலின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது.

காதல் சொட்டும் பாடல்

டைம் மிஷினை அடிப்படையாக வைத்து சைன்ஸ் ஃபிக்ஷனாக உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்துக்கு கச்சிதமாகப் பொருந்தும்படி காலம் என் காதலியோ பாடலை உருவாக்கியிருக்கிறார் ரஹ்மான். எலக்ட்ரிக் கிட்டாரின் அதிர்வும், வித்தியாசமான தாள கட்டும், ஹிப்-ஹாப் பாணியில் ஊறிய பென்னி தியோலின் ஸ்டைலிஷான குரல் இப்பாடலை டிரெண்ட் செட்டராக ஆக்குகின்றன. அதிலும் எலக்ட்ரானிக் சப்தத்தில் ஒலிக்கும் நாதஸ்வரம் இசைப்புயலின் முத்திரை. புதுமைக்காக காத்திருக்கும் இசைப் பிரியர்களை இப் பாடல் தாளம் போடவைக்கும்.

பாடலின் வரி ஈர்க்கும் அளவுக்கு இசை ஈர்க்கவில்லை. இது இரைச்சலின் தொகுப்பு என அலறுபவர்களுக்கு அடுத்து வரும் ‘நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்’ மதன் கார்க்கியின் வரிகளில் மயக்குகிறது. மென்மையான கிட்டார் மீட்டலோடு தொடங்கும் இப்பாடலை கேட்டதும் மனம் காதலால் நிரம்புகிறது. உதடுகள் முணுமுணுக்கத் தொடங்கிவிடுகின்றன. ’சஹானா சாரல் தூவுதோ’ பாடலை எங்கோ ஓரத்தில் நினைவுபடுத்தினாலும், தனக்குள் நம்மை ஆரத்தழுவிக்கொள்கிறது இப்பாடல். அதிலும் சின்மயியின் குரலோடு இழையோடும் வயலினும் அர்ஜித் சிங்கின் குரலோடு சஞ்சரிக்கும் புல்லாங்குழலும் மாயம் செய்கின்றன. சரணத்தின் இறுதி வரியில் பாடல் வேறொரு எல்லையைத் தொடுகிறது.

தாலாட்டும் நாயகி

ஜாஸில் ஊறிய தமிழை உதிர்க்கும் செல்லக் குரலோன் சித் ஸ்ரீராம் ஜோனிதா காந்தியின் துல்லியமான குரலோடு ஜோடி சேர்ந்து ’மெய் நிகரா’ பாடியிருக்கிறார். ரக்கே, ஹிப்-ஹாப் பாணிகளை இந்திய மெல்லிசையில் பிணைத்து மெருகேற்றி புதிய பதத்தில் தந்திருப்பது ரசிக்கவைக்கிறது. அதே நேரம் 'ஓசானா', 'காரா ஆட்டக்காரா' இப்படி சில பாடல்கள் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

ஓ காதல் கண்மணியில் ‘நானே வருகிறேன்’ என பாடி இன்ப அதிர்ச்சி தந்த சாஷா திருப்பதி இம்முறை ‘புன்னகையே’ பாடலில் ஹரி சரணோடு போட்டிபோட்டு இசை ஞானத்தை நிரூபித்திருக்கிறார். ‘ஹிந்தோளம்’ ராகத்திற்கு நவீனமான அரேஞ்ச்மென்டுகள் கொடுத்து புல்லாங்குழல் மூலமாக பாடல் கோக்கப்பட்டிருக்கிறது. வைரமுத்துவின் வரிகள் மேலும் ஜீவன் கூட்டுகிறது.

‘கொல்லையிலே தென்னை வைத்து’, ‘தென்றலே தென்றலே மெல்ல நீ பேசு’ என தாலாட்டுப் பாடல்களுக்கு புதிய முகங்களை எப்போதுமே தந்துவருகிறார் ரஹ்மான். அந்த வரிசையில் இம்முறை அகவுஸ்டிக்ஸ் கிட்டார் பின்னணியில் ஒலிக்க, சக்தி ஸ்ரீகோபாலனின் அழுத்தமான குரலில் ‘ஆராரோ’ தாலாட்டு பாடல் மனதுக்கு இதமளிக்கிறது. அதிலும் தெலுங்கில் ’லாலிஜோ’ என நித்யா மேனன் தேன் சொட்டும் குரலில் பாடியிருப்பது பிரமிக்கவைக்கிறது. நடிகர், நடிகைகள் பாடுவது இன்று வழக்கமாகிவிட்டது. ஆனால் நித்யா மேனன் குரலில் நேர்த்தியும் நாதமும் அழகாய் வெளிப்படுகிறது. ஏனோ இப்பாடல் மனதில் பதியத் தவறுகிறது.

ஸ்ரீநிவாச கிருஷ்ணன், ஹிரிதே கட்டானி குரலில் மந்திரங்கள் ஒலிக்க படத்தின் தீம் இசை பாடலான ‘மை டிவின் பிரதர்’ மிரட்டுகிறது. படத்தின் ஓட்டத்தை, வேகத்தை பிரதிபலிக்கும் இசைகோவை இது.

ரஹ்மானின் முத்திரைகள் ஆங்காங்கே ஜொலித்தாலும் 24 பட பாடல்களில் ‘நான் உன்’, ‘மெய் நிகர்’, ‘தீம் பாடல்’ ஆகியவை மட்டுமே நம் மனதில் ரீங்காரமிடும், மொபைலின் ரிங்டோனாக மாறும் எனத் தோன்றுகிறது.

'24' படத்தின் பாடல்கள் ஆடியோ வடிவில்: