Last Updated : 17 Feb, 2022 04:46 PM

Published : 17 Feb 2022 04:46 PM
Last Updated : 17 Feb 2022 04:46 PM

முதல் பார்வை | வீரபாண்டியபுரம் - சுசீந்திரனுக்கு என்னதான் ஆச்சு?

வன்மத்தால் பகையை உண்டாக்கிய பகையாளியை, அதே பகை மாறாமல் பிளான் போட்டு பழிதீர்த்தால் அதுவே 'வீரபாண்டியபுரம்'. இயக்குநர் சுசீந்திரனுக்கு என்னதான் ஆச்சு என கேட்பதற்கு காரணங்கள் பல. இதோ முதல் பார்வை...

திண்டுக்கல் வீரபாண்டியபுரம் பெரிய குடும்பத்தின் பெண் மீனாட்சி. இவருக்கும் ஜெய்க்கும் காதல். காதல் பெற்றோர்கள் சம்மதமின்றி கல்யாணம் வரை போகிறது. தாலிகட்டும் கடைசிநேரத்தில் மனதுமாறும் ஜெய், மீனாட்சியின் தந்தை சரத்திடம் திருமணத்துக்காக சமரசம் பேசுகிறார். இன்னொரு பக்கம், நெய்க்காரன்பட்டி தலைவர் ஜெயபிரகாஷ், சரத்தின் குடும்பத்தினர் மீது கொண்டுள்ள தீரா பகை. இந்த பகை ஏன், இவர்கள் இருவர் பகைக்கும் ஜெய்க்கும் அப்படி என்ன சம்பந்தம், இந்த பகை எப்படி சரிசெய்யப்படுகிறது, ஜெய்யின் நின்று போன கல்யாணம் நடந்ததா என்பதே எல்லாம்.

வருடத்துக்கு ஒரு படமாவது கொடுத்துவிடும் சுசீந்திரன், இந்த வருட தொடக்கத்திலேயே வெளியிட்டிருப்பது 'வீரபாண்டியபுரம்'. சிவா கதாபாத்திரத்தில் ஜெய் பக்காவாகப் பொருந்துகிறார். காதல் மற்றும் காமெடி படங்களில் மட்டுமே அதிகம் கவர்ந்து வந்த ஜெய், இந்தப் படத்தில் அமைதியான கிராமத்து இளைஞராக, காதல் செய்வது, ஆடிபாடுவது, ஆக்‌ஷன் என தன் வழக்கத்திற்கு மாறாக கதாபாத்திரத்துக்கு ஏற்ற சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஜெய்யின் கெட்டப் சுப்ரமணியபுரத்தை நியாபகப்படுத்துகிறது.

படத்தில் மீனாட்சி, அகன்ஷா சிங் இரு நாயகிகள். அகன்ஷா சிங்கை விட மீனாட்சிக்கு காட்சிகள் அதிகம் என்றாலும், இருவருக்குமே சமமான முக்கியவத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களை மையப்படுத்தும் காதல் காட்சிகளில் சில ரசிக்கும்படியாகவும், அதேநேரம் பழைய டெம்ப்ளேட் காட்சிகளாகவும் உள்ளன. சுசீந்திரனின் ஆஸ்தான நடிகர்களான ஹரீஷ் உத்தமன், ஜெயபிரகாஷ், காளி வெங்கட், பால சரவணன், சரத், அருள்தாஸ் ஆகியோருடன் வேட்டை முத்துக்குமார் போன்றோர் படத்தின் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

பாலசரவணன் நகைச்சுவை என்ற பெயரில் சில இடங்களில் கடிக்கிறார். காமெடி போர்ஷன் வேண்டும் என்பதற்காக அவரின் பாத்திரம் திணிக்கப்பட்டது போல் உள்ளது. மற்றவர்களில் காளி வெங்கட் நல்ல பெர்பாமென்ஸை கொடுத்துள்ளார். அவரை தாண்டி மற்ற அனைவரும் படத்தில் வந்து போகிறார்கள். இவர்களின் கேரக்டர்கள் படம் பார்ப்பவர் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறுகிறது திரைக்கதை அமைப்பு.

நடிப்பை தாண்டி ஜெய் இதில் இசையமைப்பாளராகவும் நல்ல அறிமுகம். எளிய ரசிகனை கவரும் துள்ளல் இசையும், காதல் பாட்டும் அவருக்கு இன்னொரு பாதையை வகுத்துக் கொடுத்துள்ளது. அஜய்யின் பின்னணி இசையை ஆக்‌ஷன் படத்துக்கு ஏற்றாற்போல் இருந்தாலும், பிஜிஎம்மில் கோட்டைவிட்டுள்ளார். படத்தின் மிகப்பெரிய பலம், வேல்ராஜ்ஜின் ஒளிப்பதிவு. திண்டுக்கல் சுற்றுவட்டார கிராம அழகை தனக்கே உரிய பாணியில் காண்பித்திருக்கிறார்.

வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, அழகர் சாமியின் குதிரை, ஆதலால் காதல் செய்வீர், ஜீவா, பாண்டிய நாடு கொடுத்த சுசீந்திரன், இரு கிராம பகை, வன்மம், ரத்தம் என தமிழ் சினிமா பலமுறை பார்த்த அதர பழசான கதையையே மீண்டும் ட்விஸ்ட்கள் வைத்து சரிக்கட்ட கொடுத்திருக்கிறார். யதார்த்தமில்லா காட்சிகள், லாஜிக் பிழைகள், மெதுவாக நகரும் திரைக்கதை போன்றவை சோர்வடைய செய்கின்றன. பார்வையாளர்களைத் திருப்தி செய்யும் விதமாக ட்விஸ்ட்கள் வைத்தாலும், அது கணிக்கக்கூடியதாகவே உள்ளது. தமிழ் சினிமா ஊறவைத்து, அடித்துத் துவைத்த பழைய டெம்பிளேட் கதையையே மீண்டும் அரைத்து ரத்தம் தெறிக்க தெறிக்க கொடுக்க முற்பட்டிருப்பதே 'வீரபாண்டியபுரம்'.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x