தெலுங்கு ஸ்டார்களிடம் கற்க வேண்டிய பாடம்: தமிழ் சினிமாவில் பான் - இந்தியா படம் உருவாவது எப்போது?
பான்-இந்தியா முன்முயற்சிகளில் தெலுங்கு திரையுலக முன்னணி நடிகர்களிடமிருந்து தமிழ்த் திரையுலக ஸ்டார் நடிகர்கள் சில விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற குரல் கோலிவுட் வட்டாரத்தில் எழத் தொடங்கியுள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு வரை, அனைத்து திரையுலக நடிகர்களுமே தங்களுடைய திரையுலகம் சார்ந்த கதைக்களங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்கள். ஆனால், ‘பாகுபலி’, ‘கேஜிஎஃப்’, ‘புஷ்பா’ முதலான படங்களின் உலகளாவிய வரவேற்பு, அனைத்து நடிகர்களின் எண்ணவோட்டத்தையுமே மாற்றியது. ஆனால், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் யாருமே இந்த விவகாரத்தில் ஆர்வம் காட்டதாது ஏன் என்ற கேள்வியும் எழுவதாக தமிழ் வர்த்தக சினிமா ஆர்வலர்கள் வினவுகின்றனர்.
‘பாகுபலி’ வரவேற்புக்குப் பிறகு, ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜுனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. இந்தப் படம் இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது. மார்ச் 25-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் அனைவருமே அனைத்து மொழிகளின் விளம்பரப்படுத்துதல் நிகழ்விலும் கலந்துகொண்டு ஆச்சரியப்படுத்தினார்கள். அதிலும், ‘ஆர்.ஆர்.ஆர்’ என படத்தின் லோகோ கொண்ட உடையில் கலந்து கொண்டது நினைவுகூரத்தக்கது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘புஷ்பா’ படமும் அனைத்து மொழிகளிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் விளம்பரப்படுத்துதல் நிகழ்விலும் அனைத்து நடிகர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்துக்குப் பிறகு சிரஞ்சீவி, ஜுனியர் என்.டி.ஆர், ராம்சரண், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களின் படங்களும் இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், பான் - இந்தியா படங்களுக்கு ஆசைப்படும் தமிழ் முன்னணி நாயகர்களின் நிலைமையோ தலைகீழாக உள்ளது. ஏனெனில், அனைத்து மொழிகளிலும் தங்களுடைய படத்தை விளம்பரப்படுத்த வேண்டும். ஆனால், இங்குள்ள நாயகர்கள் தமிழில் கூட விளம்பரப்படுத்த வருவதில்லை என்பதுதான் உண்மை என்கின்றனர் சில தயாரிப்பாளர்கள் தரப்பு.
இது குறித்து கோலிவுட்டை உற்று நோக்கும் ஒருவர் கூறும்போது, ”தன்னுடைய படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மட்டுமே கலந்து கொள்வார் ரஜினி. அந்தப் படம் தொடர்பான எந்தவொரு பேட்டியும் வழங்குவதில்லை கமல், சிவகார்த்திகேயன் ஆகியோர் மட்டுமே தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேட்டிகள் அளிப்பார்கள். இதர மொழிகளில் வரும் காலங்களில் கவனம் செலுத்துவார்கள் என்று நம்பப்படுகிறது.
விஜய், அஜித், சூர்யா போன்ற நாயகர்களில் சூர்யா மட்டுமே தமிழில் படம் வெளியாகும் சமயத்தில் மட்டுமே பத்திரிகையாளர்களைச் சந்திப்பார். விஜய் மற்றும் அஜித் இருவருமே தங்களுடைய படம் தொடர்பாக எந்தவொரு பேட்டியும் அளிப்பதில்லை. விஜய் கூட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வார். ஆனால், அஜித் படம் நடிப்பதோடு தனது வேலை முடிந்துவிட்டது என்று கழன்று கொள்வார். இந்தச் சூழலில் எப்படி இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் ஒரு படத்தைத் திட்டமிடுவது என்பது அனைத்து தயாரிப்பாளர்களின் கேள்வியாக உள்ளது.
இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் பான்-இந்தியா படமாக வெளியாகி 100 கோடி, 200 கோடி வசூல் என்று ஆசைப்படலாம், தவறில்லை. ஆனால், அதற்கு அனைவருமே தங்களுடைய பிடிவாதத்தில் இருந்து கொஞ்சம் கீழே இறங்கி வர வேண்டும். இறங்கி வருவார்களா என்று கேட்டீர்களா என்றால், அவர்களைப் பொறுத்தவரை 25 கோடி, 60 கோடி, 100 கோடி சம்பளம் வேண்டும் என்ற எண்ணோட்டத்தில் மட்டுமே இருக்கிறார்கள்” என்று நொந்துகொண்டார் அவர்
