தெலுங்கில் ரீமேக் ஆகிறது ‘விநோதய சித்தம்’?

தெலுங்கில் ரீமேக் ஆகிறது ‘விநோதய சித்தம்’?
Updated on
1 min read

தமிழில் வரவேற்பைப் பெற்ற ‘விநோதய சித்தம்’ திரைப்படம், தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அபிராமி ராமநாதன் தயாரிப்பில் சமுத்திரக்கனி இயக்கி நடித்த படம் ‘விநோதய சித்தம்’. ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படத்தில் தம்பி ராமையா, சமுத்திரக்கனி, ஜெயப்பிரகாஷ், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. கருத்தியல் ரீதியாக சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், சமூக வலைதளத்தில் சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவான சிறந்த படம் எனப் பலரும் பாராட்டி இருந்தார்கள்.

தற்போது இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகள் நடைபெற்று வருவதாக தெலுங்கு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இதனை சமுத்திரக்கனி இயக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் தயாரிப்பாளர் யார் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.

‘விநோதய சித்தம்’ தெலுங்கு ரீமேக்கில் சமுத்திரக்கனி கதாபாத்திரத்தில் பவன் கல்யாண், தம்பி ராமையா கதாபாத்திரத்தில் சாய் தரம் தேஜ் நடிக்கவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். சாய் தரம் தேஜின் வயதுக்கு தகுந்தாற் போல் கதைக்களத்தினை தெலுங்கில் மாற்றி அமைத்து பணிபுரிந்து வருகிறார் சமுத்திரக்கனி.

பவன் கல்யாண் நடித்து வரும் ‘ஹரிஹர வீரமல்லு’ மற்றும் ஹரிஷ் சங்கர் இயக்கவுள்ள படம் ஆகியவற்றின் பணிகள் தாமதமாகி வருகின்றன. ஆகையால் ‘விநியோத சித்தம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கிற்கு உடனடியாக தேதிகள் ஒதுக்கியுள்ளார் பவன் கல்யாண். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in