Last Updated : 03 Feb, 2022 01:25 PM

Published : 03 Feb 2022 01:25 PM
Last Updated : 03 Feb 2022 01:25 PM

தமிழ் சினிமாவில் கணிக்க முடியாத 'வேரியன்ட்' கலைஞன்! - சிம்பு பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி கதாசிரியர், இசையமைப்பாளர், பாடகர், டான்சர், இயக்குநர் என பல்வேறு தளங்களில் முத்திரைப் பதிப்பவர்கள் வெகு சிலரே. அப்படியான பன்முகக் கலைஞர்களில் ஒருவரான சிலம்பரசனுக்கு இன்று 39-வது பிறந்தநாள்.

‘மாநாடு’ படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் ஒய்.ஜி.மகேந்திரன் கூறிய வார்த்தைகள் இவை: “தமிழ்த் திரைத்துறையில் சினிமாவுக்காகவே பிறந்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் கமல்ஹாசன். மற்றொருவர் சிலம்பரசன்”. தந்தையின் துணைகொண்டு சினிமாவுக்குள் நுழைந்தவர் என்று அனைத்து வாரிசு நடிகர்கள் மீதும் வைக்கப்படும் அதே குற்றச்சாட்டு சிம்புவின் மீது வைக்கப்படுவதுண்டு. தந்தையில் உதவியோடு நுழையும் அனைத்து நடிகர்களையும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. முதல் படத்தில் குடும்ப உறவுகளின் துணையுடன் அறிமுகமானாலும் அடுத்தடுத்த படங்களில் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டு அதில் வெற்றிநடை போடுபவர்கள் சிலரே. அவர்களில் ஒருவர் சிம்பு.

சிம்புவை எப்போதும் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடைத்து விட முடியாது. தனக்கென்று ஒரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு அதில் மட்டுமே இயங்குவதை சிம்பு எப்போதுமே விரும்புவதில்லை. ஆரம்பத்தில் நாயகனாக அறிமுகமான ‘காதல் அழிவதில்லை’ தொடங்கி ‘தம்’, ‘அலை’ உள்ளிட்ட படங்களை விரல்களை மடக்கி வித்தை காட்டி வலிந்து திணிக்கப்பட்ட பன்ச் வசனங்களைப் பேசி கமர்ஷியல் வழியையே தேர்ந்தெடுத்திருந்தாலும், அதன்பிறகு வந்த ‘கோவில்’ படத்தில் அதற்கு முன்பு நடித்துக் கொண்டிருந்த கதாபாத்திரங்களுக்கெல்லாம் முற்றிலும் நேரெதிரான ஒரு பாத்திரத்தை தேர்வு செய்து நடிப்பிலும் முதிர்ச்சி காட்டியிருப்பார் சிம்பு.

பின்னர் மீண்டும் தன் பழைய ஸ்டைலில் ‘குத்து’ படத்தில் விரல் வித்தை காட்டி பன்ச் டயலாக்கு பேசினார். அப்படம் வெளியான அதே 2004-ஆம் ஆண்டில் வெளியான ‘மன்மதன்’ சிம்புவின் ஆளுமையை முழுமையாக வெளிக்கொண்டு வந்தது என்று சொல்லலாம். முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்த சிம்பு அப்படத்தின் திரைக்கதை பொறுப்பையும் ஏற்றார். படமும் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. இன்றுவரை சிம்புவின் டாப் க்ளாஸ் படங்களில் ஒன்றாக ‘மன்மதன்’ இருந்து வருகிறது.

அதன் பிறகு வந்த ‘தொட்டி ஜெயா’ பாக்ஸ் ஆபீஸில் சொதப்பினாலும் இன்றும் சிம்புவின் கதாபாத்திரத்துக்காகவும், பாடல்களுக்காகவும் பேசப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது.

2006-ஆம் ஆண்டு வெளியான ‘வல்லவன்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார் சிம்பு. முழுக்க முழுக்க கமர்ஷியல் எண்டெர்டெய்னராக எடுக்கப்பட்ட படமும் பாக்ஸ் ஆபீஸிலும் ஹிட்டடித்தது. அதன் பிறகு ‘காளை’, ‘சிலம்பாட்டம்’ என தொடர்ந்து முழு கமர்ஷியல் மாஸ் மசாலா படங்களிலேயே கவனம் செலுத்தினார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் 2010-ஆம் ஆண்டு வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படம் சிம்புவின் இன்னொரு பரிமாணத்தை ரசிகர்களுக்கு காட்டியது. வழக்கமான சிம்பு படங்களில் இருக்கும் அத்தனை இலக்கணங்களையும் உடைத்து ஒரு பக்கத்து வீட்டு பையன் போன்ற பிம்பத்தை சிம்புவுக்கு கொடுத்தது. தமிழ் சினிமாவின் விரல் விட்டு எண்ணக் கூடிய நல்ல காதல் படங்களில் ஒன்றாகவும் ‘விடிவி’ இருந்து வருகிறது. அதன் பிறகு ‘வானம்’ படமும் கிட்டத்தட்ட ‘விடிவி’ சிம்புவின் ஒரு நீட்சி என்று சொல்லலாம். அதில் இருந்த அதே ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான சிம்புவை ‘வானம்’ படத்திலும் பார்க்க முடிந்தது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் தான் ஒரு தேர்ந்த நடிகன் என்பதை தன் நெகிழ்வான நடிப்பின் மூலம் உணர்த்தியிருப்பார் சிம்பு.

‘வானம்’ படத்துக்குப் பிறகு சிம்புவுக்கு சோதனைக் காலம் என்று சொல்லலாம். ‘ஒஸ்தி’ பாஸ்க் ஆபீஸில் படுதோல்வி, ‘போடா போடி’ விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டாலும் வசூல் ரீதியாக வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு மூன்று வருடங்கள் சிம்பு எந்த படமும் நடிக்கவில்லை. 2015-ஆம் ஆண்டு வந்த ‘வாலு’ சுமாரான வெற்றியே பெற்றது. அதன் பிறகு வந்த ‘இது நம்ம ஆளு’ படுதோல்வி. ‘விடிவி’ கொடுத்த வெற்றியால் கவுதம் மேனனுடன் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் இணைந்த சிம்புவுக்கு அப்படம் ஏமாற்றத்தையே கொடுத்தது.

இதன் பிறகு வந்தது ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இப்படம் அடைந்த தோல்வியும், எதிர்கொண்ட விமர்சனங்களும் சிம்புவின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ஷூட்டிங் வரமாட்டார், யார் சொல்வதையும் கேட்கமாட்டார் என பல்வேறு விமர்சனக் கணைகள் சிம்புவின் மீது தொடுக்கப்பட்டன. எப்போதும் ஃபிட்டான உடற்கட்டுடன், அனல் பறக்க நடனமாடும் சிம்பு அதீத உடற்பருமனுடன் தொலைகாட்சிகளிலும், பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் தோன்றினார். எதைப் பேசினாலும் அது மீம்களாகவும், ட்ரோல்களாகவும் மாறின.

அதன் பிறகு மணிரத்னம் இயக்கிய ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நான்கு நாயகர்களில் ஒருவராக நடித்திருந்தாலும் சிம்புவின் பாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பழைய சிம்புவாக உடலை ஃபிட்டாக மாற்றி ஈஸ்வரனாக களம் இறங்கினார். படம் சுமாரான வெற்றி பெற்றாலும் தங்கள் ஆதர்ச நடிகர் மீண்டு வந்ததில் சிம்பு ரசிகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

இறுதியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’ படம் சிம்புவின் மீது அதற்கு முன்பாக வைக்கப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுக்களையும் துடைத்தெறிந்து பெரும் வெற்றியைப் பெற்றது. இதுவரை தமிழில் யாரும் முயற்சிக்காத ஒரு ஜானரை தேர்ந்தெடுத்து அதை வெங்கட் பிரபு உதவியுடன் தனக்கான ஒரு மிகச் சிறந்த ஒரு கம்பேக்காக மாற்றிக் காட்டினார் சிம்பு. முன்னரே குறிப்பிட்டதைப் போல எப்போதும் தனக்கென ஒரு வட்டத்தை போட்டுக் கொள்ளாமல் வெற்றியோ தோல்வியோ பல எல்லைகளையும் தொட்டுப் பார்ப்பவர் சிம்பு. நடிப்பு தவிர்த்து ஆல்பம், படங்களுக்கு இசையமைப்பது, பாடல் எழுதுவது என வெற்றி தோல்வி குறித்து கவலைப்படாமல் பல தளங்களில் முயன்று பார்த்து விடுபவர்.

எத்தகைய தோல்விகள் வந்தாலும், எத்தனை ஆண்டுகள் இடைவெளி ஏற்பட்டாலும் தொடர்ந்து ஊக்கப்படுத்தி உற்சாகமூட்டும் ரசிகர்கள் அமைவது சிலருக்கே நடக்கும். அத்தகைய ரசிகர்கள் சிம்புவுக்கு கிடைத்துள்ளார்கள். எத்தகைய ட்ரோல்கள், மீம்கள் மூலம் கேலி கிண்டல்கள் வந்தாலும் எந்த சூழலில் அவருக்கு ஆதரவு தெரிவிக்க ஒரு பெரும் ரசிகர் கூட்டம் சமூக வலைதளங்களில் அவருக்காக எப்போதும் காத்திருக்கிறது. அந்தப் பொறுப்பை உணர்ந்து இனி வரும் காலங்களிலும் தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து புதிய முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு, அத்தகைய ரசிகர்களை மகிழ்விப்பார் என்று நம்பலாம்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x