கரோனா கட்டுப்பாடுகள் எதிரொலி: ‘விக்ராந்த் ரோணா’ வெளியீடு தள்ளிவைப்பு
கிச்சா சுதீப் நடித்துள்ள ‘விக்ராந்த் ரோணா’ படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விக்ராந்த் ரோணா’. அனூப் பண்டாரி இயக்கியுள்ள இப்படத்தில் நிரூப் பண்டாரி, ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸ் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்கும் இப்படத்தை ஜாக் மஞ்சுநாத், ஷாலினி மஞ்சுநாத் தயாரித்துள்ளனர். இப்படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் 3டியில் வெளியாகிறது. இப்படம் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது.
தற்போது கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு ‘விக்ராந்த் ரோணா’ திரைப்படம் தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள அறிககையில் கூறப்பட்டுள்ளதாவது:
பிப்ரவரி 24 அன்று உங்கள் அனைவரையும் திரையரங்குகளில் சந்திக்க நாங்கள் தயாராக இருந்தபோதிலும், தற்போதைய கரோனா சூழ்நிலையும் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளும் இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுவதற்கு சாதகமானதாக இல்லை.
காத்திருப்பு கடினமானது என்பதை நாங்கள் உணர்கிறோம். ஆனால் இப்படத்தின் சினிமா அனுபவம் உங்கள் பொறுமைக்கு தகுதியானதாக இருக்கும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். உலகம் அதன் புதிய ஹீரோவை சந்திப்பதற்கான புதிய தேதியை விரைவில் அறிவிக்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
