Published : 25 Jan 2022 06:07 PM
Last Updated : 25 Jan 2022 06:07 PM

சொகுசு கார் இறக்குமதி வழக்கில் நடிகர் விஜய் மீதான எதிர்மறைக் கருத்துகளை நீக்கியது சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கின் உத்தரவில் நடிகர் விஜய் குறித்த தனி நீதிபதியின் எதிர்மறைக் கருத்துகளை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நடிகர் விஜய் கடந்த 2012-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய சென்னை வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த உத்தரவிடபட்டது. இதையடுத்து, காரை இறக்குமதி செய்த போது, இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என நடிகர் விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், 'நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது' என கருத்து தெரிவித்து, நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தார்.

அபராதம் விதித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்தும், தனி நீதிபதியின் தீர்ப்பில் உள்ள விமர்சனங்களை நீக்க கோரியும் நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையிட்டு வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா மற்றும் முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், நிலுவை வரித் தொகையான 32 லட்சத்தை 30 ஆயிரத்தை கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி செலுத்தப்பட்டுவிட்டது. அது அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டதால், தனி நீதிபதியின் உத்தரவு அமல்படுத்தப்பட்டுவிட்டது. எனவே நடிகர் விஜய்க்கு எதிரான நீதிமன்ற கருத்துக்களை தீர்ப்பிலிருந்து நீக்க வேண்டும். நுழைவு வரி வசூலிப்பதா? வேண்டாமா? என்பது 20 ஆண்டுகளாக இருந்துவரும் பிரச்சினை, சுங்க வரி விவகாரத்தில் மாநில அரசு சட்டம் இயற்ற முடியாது என்பதால், மத்திய அரசு தான் சட்டம் இயற்ற முடியும். இறக்குமதி காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை இருந்ததால்தான் 20 சதவீதம் செலுத்தப்பட்டு, தற்போது 80 சதவீதமும் செலுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

நடிகர் விஜய் வழக்கு ஆவணங்களில் தொழிலை குறிப்பிடவில்லை என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருக்கிறார். அதனை சொல்ல வேண்டிய அவசியமில்லை. நடிகர்கள் நுழைவு வரி செலுத்தவதில்லை என்றும், வரி செலுத்துவதை தவிர்க்க வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறுவதும், ரசிகர்கள், உண்மையான கதாநாயகர் என நினைக்கும் நிலையில், ரீல் கதாநாயகராக இருக்க கூடாது, வரி செலுத்த மறுப்பது சட்டவிரோதம் போன்ற நீதிபதியின் கருத்துகள் தேவையற்றது. கடின உழைப்பால் கார் வாங்கப்பட்ட நிலையில் அதை நீதிபதி விமர்சித்து இருப்பது தேவையற்றது .சினிமாத் துறை லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது. மனுதாரருக்கு வரி ஏய்ப்பு எண்ணம் எதுவுமில்லை. மற்றவர்களைப் போல தானும் வழக்கு தொடர்ந்ததாக விஜய் தரப்பில் வாதிடப்பட்டது. தன்னை தேச விரோதியாக கூறுவது தவறு , இதுபோன்று நீதிபதியின் கருத்துக்கள் வேறு எந்த வழக்கிலும் கூறப்படவில்லை.

நீதிபதிகள் கடுமையான கருத்துக்களை தெரிவிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சில வழக்குகளில் நீதிமன்றத்தை தவறாக வழி நடத்துபவரை ஆய்வு செய்யலாம் என்றும், அவர்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கலாம். ஆனால், இந்த வழக்கில் தேவையில்லை. வரி கேட்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்றால் அதை எதிர்த்து வழக்கு தொடரலாம். மேலும் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் தன்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியதோடு, குற்றவாளி போல தன்னை காட்டியுள்ளதாக நடிகர் விஜய் தரப்பில் வாதிடப்பட்டிருந்தது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர்.

இந்த வழக்கில் சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகு இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், புஷ்பா சத்யநாராயணா மற்றும் முகமது ஷபீக் அமர்வு, இறக்குமதி கார் வழக்கில், நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தெரிவித்த எதிர்மறை கருத்துகள் நீக்குவதாக தீர்ப்பளித்தனர். மேலும், நடிகர் விஜய் மேல் முறையீட்டு மனுவை ஏற்பதாகவும் நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x