சந்தானம் ஓர் ஆன்மிகவாதி- ரியா சுமன் புகழாரம்
‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை ரியா சுமன் பகிர்ந்துள்ளார்.
ஸ்வரூப் ஆர்.எஸ்.ஜே இயக்கத்தில் நவீன், ஸ்ருதி ஷர்மா, ஸ்ரீதா ராஜகோபாலன், ராம்தத், விஸ்வநாத் உள்ளிட்ட பல புதுமுகங்கள் நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் 'ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாஸ ஆத்ரேயா'. இப்படம் விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.
இப்படத்துக்குக் கிடைத்த வரவேற்பை முன்னிட்டு இது தமிழில் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. மனோஜ் பீடா இயக்கும் இப்படத்தில் சந்தானம் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் ரியா சுமன், சுருதி ஹரிஹரன், புகழ், முனீஸ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இப்படம் குறித்து நடிகை ரியா சுமன் கூறியுள்ளதாவது:
இயக்குநர் மனோஜ் இதுவரை நாம் பார்த்திராத ஒரு புதிய சந்தானத்தை காட்டியுள்ளார். படத்தில் எனக்கு வலிமையான கதாபாத்திரம். என்னுடைய பங்கு படத்தில் அதிகமாக இருக்கும். படப்பிடிப்பு தொடங்கிய பின்னர்தான் நான் தெலுங்குப் படத்தைப் பார்த்து என்னுடைய கதாபாத்திரத்தை பற்றி நான் முழுமையாக தெரிந்து கொண்டேன்.
சந்தானத்தைப் பொறுத்தவரை உடனடியாக கவுன்ட்டர் அடிக்கும் ஒருவராகத் தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் படப்பிடிப்பின் போது தான் அவர் மனிதர்களையும், மற்ற விஷயங்களையும் ஆழ்ந்து கவனிப்பவர் என்று தெரிந்து கொண்டேன். அவருடைய ஆழ்ந்து கவனிக்கும் திறனால்தான் அவரால் போகிற போக்கில் ஒரு ஜோக்கை அடித்துவிட முடிகிறது.
என்னைப் போலவே அவரும் ஓர் ஆழமான ஆன்மிகவாதி. படப்பிடிப்பின் போது அவருடன் பேசிக் கொண்டிருக்கையில், அவரும் என்னைப் போலவே ஈஷா யோகாவைப் பின்பற்றுபவர் என்பதையும், சிவபக்தர் என்பதையும் தெரிந்து கொண்டேன்.
இவ்வாறு ரியா சுமன் கூறியுள்ளார்.
தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடிக்கும் ‘மன்மத லீலை’ படத்தில் ரியா சுமன் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
