Published : 21 Jan 2022 06:46 AM
Last Updated : 21 Jan 2022 06:46 AM

சாய்னா நெவால் குறித்து சர்ச்சை ட்வீட்: நடிகர் சித்தார்த்துக்கு சைபர் க்ரைம் போலீஸார் சம்மன்

சென்னை: பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்விட் செய்த விவகாரத்தில் நடிகர் சித்தார்த்துக்கு சென்னை சைபர் க்ரைம் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் பஞ்சாப் மாநிலத்துக்கு சென்றபோது, விவசாயிகளின் போராட்டத்தால் அவர் மேம்பாலத்திலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், அவர் பாதியிலேயே தனது பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார். பிரதமரின் பயணத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து பிரதமர் மோடிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டனர்.

இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘பிரதமரின் பாதுகாப்பில் சமரசம் செய்துகொண்டால் எந்த ஒரு நாடும் பாதுகாப்பாக இருக்க முடியாது. பஞ்சாபில் பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவான வார்த்தைகளில் கண்டிக்கிறேன்’ என ட்விட் செய்திருந்தார். சாய்னாவின் இந்த ட்விட்டுக்கு நடிகர் சித்தார்த் தெரிவித்த பதிலில் ஆபாசமாக பொருள் கொள்ளும்படியான வார்த்தை பயன்படுத்தப்பட்டதாக சர்ச்சை உருவானது. கண்டனங்களும் எழுந்தன.

நடிகர் சித்தார்த்துக்கு எதி ராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு மகாராஷ்டிரா மற்றும் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர்களை தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தியது. இதையடுத்து தனது ட்விட் குறித்து விளக்கம் அளித்த சித்தார்த், மன்னிப்பும் கோரியிருந்தார். சித்தார்த் மன்னிப்பு கேட்டது மகிழ்ச்சி என சாய்னா நேவால் தெரிவித்தார்.

இதனிடையே, நடிகர் சித்தார்த் விவகாரம் குறித்து விசாரணை நடத்த சென்னை சைபர் க்ரைம் போலீஸாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு பரிந்துரை செய்தார். இதுகுறித்து முழுமையாக விசாரணை மேற்கொள்ள சைபர் க்ரைம் போலீஸார் முடிவு செய்தனர். முதல்கட்டமாக, சாய்னா நேவால் குறித்த விமர்சன பதிவுக்கு நேரில் விளக்கம் அளிக்கும்படி நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x