Last Updated : 15 Jan, 2022 06:58 PM

 

Published : 15 Jan 2022 06:58 PM
Last Updated : 15 Jan 2022 06:58 PM

புஷ்பா: குத்துப் பாடலில் முற்போக்கு...மொத்தப் படத்தில் பிற்போக்கு!

"மரக்கட்டையப் பிடிக்க வந்த ஆம்பளைன்னு பார்த்தா, சட்டையப் பிடிக்க வந்த..." என்று அந்த வசனத்தை முடிக்காமலே அந்த வார்த்தையின் முடிவை பார்க்கும் ரசிகர்களிடம் விட்டுவிடுவார் 'புஷ்பா' படத்தின் நாயகன் அல்லு அர்ஜூன்.

சமந்தாவின் வைரல் ஹிட் பாடலான 'ஊ சொல்றியா மாமா... ஊ ஊ சொல்றியா மாமா...' பாடலில் பெண்களை மோகப் பொருளாக மட்டுமே பார்க்கும் பார்வையை விமர்சித்து வரிகள் எழுதப்பட்டிருக்கும். இதன் காரணமாக இப்பாடலின் வரிகளுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் எழுதப்படுவதைப் பார்க்கலாம். ஆனால், இப்பாடலில் உள்ள வரிகளுக்கும் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளுக்கும் இடையேயே அவ்வளவு முரண் உள்ளது.

'பெண்களை அப்படி பார்க்காதீங்க... இப்படி பார்க்காதீங்க' என்று பாடலின் வரியில் மட்டும் எழுதிக்கொள்ள இயக்குநர் சுகுமார் அனுமதித்தாரா என்று தெரியவில்லை. படத்தின் பல காட்சிகளில் பெண்களை மட்டம் தட்டும் பிற்போக்குக் காட்சிகள் நிறைய இடம்பெற்றுள்ளன.

இந்திய வர்த்தக சினிமாவுக்கே உரிய, கதாநாயக வழிபாடுதான் 'புஷ்பா' படம் முழுக்க நிரம்பி இருந்தன. பெண் மேலாடை இல்லாமல் இருக்கும்போது ஹீரோ சட்டையைக் கழற்றிக் கொடுக்கும் காட்சியிலிருந்து தெலுங்கு சினிமா இன்னமும் மீண்டு வரவில்லை.

தெலுங்கு படங்களை பொறுத்தவரை, அங்கு கதாநாயகன் வழிபாடுதான் பிரதானம். கதாநாயகனே அங்கு எல்லாமானவர். பெரும்பாலான தென்னிந்திய சினிமாக்கள் அவ்வாறுதான் இயக்கப்படுகின்றன. 100 அடியாட்கள் வந்தாலும் கதாநாயகன் வெறும் கையாலே அடித்துவிட்டு, எதற்கும் அடங்காதவன் என்று வசனம் பேசிவிட்டு நெருப்பு பறக்க நடப்பார். ஆனால் பெண்களோ தங்கள் துப்பாட்டாவை யாராவது தூக்கி ஏறிந்துவிட்டால் தலை குனிந்து கீழே நிற்க வேண்டும்.

மசாலா படங்களுக்கேவுரிய பாணியான கதாநாயகனை மையபடுத்திதான் பிற கதாபாத்திரங்கள் சுழலும்.

கதாநாயகனை சுவாசிப்பது, அவரை சுற்றி நடனமாடுவது, கடவுளாக பார்ப்பதுதான் கதாநாயகியின் வேலை. புஷ்பா படத்தின் கதாநாயகியான ஸ்ரீவள்ளியும் இதனையேதான் செய்கிறார்.

பிற்போக்குத்தனத்தின் உச்சமாக, நாயகனை கடவுளாகப் பார்ப்பதும், பாடுவதும் (சாமி பாடல்) இங்கே கவனிக்கத்தக்கது.

”ஒருவரைத் திட்ட வேண்டும் என்றால் அனைவரும் அம்மாவைத்தானே திட்டுவீர்கள்” போன்ற சில பாராட்டுக்குரிய வசனங்கள் படத்தில் வந்தாலும் கதையின் நாயகியின் கதாபாத்திரம் வடிவமைப்பு அத்தனை பாராட்டுகளையும் கீழே தள்ளிவிடுகிறது.

உதாரணத்துக்கு 'நீ ஒன்னும் பெரிய அழகி இல்ல, தேறாத கூட்டத்துல அழகியா தெரியுற புள்ள... பூவைத் தலையில் வைச்சா எந்தப் பொண்ணும் போதை ஏத்தும்' போன்ற பாடல் வரிகளுடன்தான் படத்தின் கதாநாயகியான ஸ்ரீவள்ளியை (ராஷ்மிகா மந்தனா) அறிமுகப்படுத்துகிறார்கள். அதுமட்டுமல்லாது 'பைத்தியக்காரி', 'காசு கொடுத்தா பையனைப் பார்ப்பார்' என அந்தக் கதாபாத்திரத்தின் மீது எந்தப் பிடிப்பும் ஏற்படாமலிருப்பதற்கான அத்தனை மெனக்கெடலையும் இயக்குநர் செய்திருந்தார்.

இதில் உச்சமாக படத்தின் ரவுடி கதாபாத்திரம், ஸ்ரீவல்லியைத் தவறாக அணுகும்போது நேராக ஹீரோவிடம் சென்று 'நான் உன்னுடன் ஓர் இரவு வாழ்ந்துவிட்டு, பிறகு மரணித்து விடுகிறேன்' என்பது போன்ற வசனங்களை நாயகி பேசுவார்.

இந்த உலகின் அனைத்துப் பாலியல் துன்புறுத்தலுக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் மரணம் மட்டுமே தீர்வாக முடியும் அதுவே, அப்பெண்ணுக்கு கௌரவம் என்ற தொனியில் நாயகி பேசும் வசனங்கள் இருப்பதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதுபோன்று கதாநாயகியின் கதாபாத்திரைத்தை சிறுமை செய்யும் பல காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளன.

கதாநாயகனின் பின்னால் இருந்துகொண்டு பயணிக்கும் நாயகி ஸ்ரீவள்ளியின் கதாபாத்திரம் இந்திய வர்த்தக சினிமா உலகின் கதாநாயகி சார்ந்த பரவலான பொதுப் புத்தியை மீண்டும் திரையில் நிரூபணம் செய்திருக்கிறது. இதனைத் திரையரங்குகளில் பெண்களும் கொண்டாடுகிறார்கள்.

படத்தின் இறுதிக் காட்சியில் கையில் ரத்தக் காயங்களுடன் வரும் நாயகன் புஷ்பாவை நாயகி வெறும் கேள்வி மட்டும் கேட்டுவிட்டு அமைதியாகத் திருமணம் செய்துகொள்வார் நாயகி ஸ்ரீவள்ளி. படமும் அதன் பிற்போக்குத்தனங்களும் முடிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x