Published : 10 Jan 2022 06:38 PM
Last Updated : 10 Jan 2022 06:38 PM

சாய்னா குறித்து ஆபாச கருத்து: சித்தார்த் மீது வலுக்கும் சர்ச்சையும் பின்புலமும்

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து ஆபாசமாக கருத்து பதிவிட்டதாக நடிகர் சித்தார்த்துக்கு கண்டனங்கள் வலுத்துள்ளது. அவரை சாய்னா நேவாலே கடுமையாக விமர்சித்து பதில் தந்துள்ள நிலையில், தேசிய மகளிர் ஆணையமும் கடுமையாக கண்டித்து நோட்டீஸும் அனுப்பியுள்ளது.

சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக இயங்கும் நடிகர்களில் முக்கியமானவர் சித்தார்த். தான் நடிக்கும் படங்களை விளம்பரப்படுத்துவது மட்டுமன்றி, அரசியல் ரீதியான கருத்துகளையும் துணிச்சலாக வெளியிட்டு வருகிறார். சிலசமயங்களில் சித்தார்த் தனது ட்வீட்களின் மூலம் சர்ச்சைகளிலும் சிக்குவதுண்டு.

இப்போது பிரதமர் மோடியின் பாதுகாப்பு விதிகள் மீறப்பட்ட விவகாரத்திலும் கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். கடந்த 5-ம் தேதி பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக ஃபெரோஸ்ர் நகருக்குச் சென்றபோது விவசாயிகளின் போராட்டத்தால் மீண்டும் டெல்லி திரும்பினார். சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

"எந்தவொரு நாட்டின் பிரதமரின் பாதுகாப்பும் சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு தன்னைத்தானே பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. பஞ்சாப்பில் பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவான வார்த்தைகளில் நான் கண்டிக்கிறேன்" என்று தனது ட்வீட்டில் சாய்னா தெரிவித்திருந்தார். சாய்னாவின் இந்தப் பதிவை டேக் செய்து நடிகர் சித்தார்த், "இறகுப்பந்து உலகின் சாம்பியன்... கடவுளுக்கு நன்றி. எங்களிடம் இந்தியாவின் பாதுகாவலர்கள் உள்ளனர்" என்று தெரிவித்தார்.

இதில் இறகுப்பந்தின் ஆங்கில வார்த்தையான ஷட்டல் கார்க் என்பதை குறிக்க சித்தார்த் ''Subtle Cock" என்று ஆபாசமாக குறிப்பிட்டிருந்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. இது பெண்களை ஆபாசமாக சித்தரிக்கிறது என்று சர்ச்சை உருவானது. மோசமான மொழியில் சாய்னாவை சித்தார்த் அவமானப்படுத்தியுள்ளார் எனப் பலரும் அவருக்கு எதிராக கண்டனங்களை பதிவிட்டனர்.

சிவசேனா ராஜ்யசபா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் யாரும் பயன்படுத்த தகுதியற்ற மொழியில் சித்தார்த் பேசியுள்ளார். கருத்து வேறுபாடு எவ்வளவு இருந்தாலும், சொற்களில் நாகரீகம் கடைபிடிக்க வேண்டும்" என்று கடுமையாக பேசியுள்ளார். இதேபோல், நடிகை சின்மயி "சித்தார்த் இது உண்மையிலேயே அபத்தமானதாக உள்ளது" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, "விளையாட்டு வீரர்கள் வியர்வை மற்றும் ரத்தத்தை தங்கள் நாட்டுக்காக கொடுப்பவர்கள். நமது நாட்டின் பெருமை மற்றும் விளையாட்டின் அடையாளமாக இருக்கும் சாய்னாவுக்கு எதிராக மோசமான மொழிகள் மொழி பயன்படுத்தப்படுவதைப் பார்க்கும்போது வேதனை ஏற்படுகிறது. இந்திய விளையாட்டு வீரராகவும், ஒரு மனிதராகவும் சாய்னாவுடன் இந்த தருணத்தில் உடன் நின்று அவருக்கு எதிராக சொல்லப்பட்டுள்ள கேவலமான வார்த்தைக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா உள்ளிட்ட பலரும் சித்தார்த்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில் விமர்சனத்திற்கு பதிலளித்த சித்தார்த், "நான் தரக்குறைவாக எதுவும் சொல்லவில்லை. "COCK & BULL" என்பதில்இருந்து தான் குறிப்பிட்டு அந்த கருத்தை பதிவிட்டேன். ஆபாசமாக பதிவு செய்ய வேண்டும் என்கிற எந்தவொரு உள்நோக்கமும் எனக்கு இல்லை. யாரையும் அவமரியாதை செய்ய வேண்டும் என்றும் நான் நினைக்கவில்லை. அவ்வளவுதான்" என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

சித்தார்த்தின் விளக்கம் ஒருபுறம் இருக்க, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தேசிய மகளிர் ஆணையம் மராட்டிய காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும், சித்தார்த்துக்கு நோட்டீஸும் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், "உங்களின் கருத்து பெண்களை மற்றும் பெண்களின் கண்ணியத்தை அவமதிக்கும் நோக்கில் உள்ளது. ஒரு பெண்ணுக்கு எதிரான இத்தகைய மோசமான மற்றும் பொருத்தமற்ற கருத்தை மகளிர் ஆணையம் வன்மையாக கண்டிக்கிறது. தானாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x