Published : 04 Jan 2022 05:12 PM
Last Updated : 04 Jan 2022 05:12 PM

'எனக்கு நீதி வேண்டும் முதல்வரே' - நடிகை கோரிக்கை: அடுத்தடுத்த நகர்வுகளால் கவனம் பெறும் திலீப் வழக்கு!

பாலியல் தொல்லை விவகாரத்தில், திலீப் மீது பாலச்சந்திர குமார் எழுப்பிய குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு பாதிக்கப்பட்ட நடிகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனிடையே 'இந்த வழக்கை மேலும் விசாரிக்க வேண்டாம்' என்று கேரள காவல்துறை தலைமை இயக்குநருக்கு நடிகர் திலீப் கடிதம் எழுதியுள்ளார். இதன் அடுத்தடுத்த நகர்வுகளால் இவ்வழக்கு கவனம் பெற்றுள்ளது.

தமிழ், மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை கடந்த 2017-ல் படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் செல்லும்போது கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளானார். அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தை செய்த நடிகையின் கார் டிரைவர் பல்சர் சுனி என்பவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். நடிகை மீதான முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவத்தை நடிகர் திலீப் செய்யச் சொன்னதாக பல்சர் சுனி வாக்குமூலம் கொடுத்தார்.

பிறகு திலீப் கைது செய்யப்பட்டு 80 நாள்கள் சிறைவாசம் அனுபவித்த பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட தற்போது படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதனிடையே சிறப்பு நீதிமன்றத்தால் நடத்தப்பட்டு வரும் இந்த வழக்கின் விசாரணை பல்வேறு காரணங்களால் தாமதமாகி வரும் நிலையில் தற்போது நடந்து வரும் நிகழ்வுகள் கவனம் பெற்றுவருகின்றன. திலீப்பின் நண்பர் பாலச்சந்திர குமார் என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டி, அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நடிகை முதல்வருக்கு மனு எழுதிய விவகாரம் என அடுத்தடுத்த நகர்வுகள்தான் கவனம் பெறக் காரணம்.

முதலில் இந்த வழக்கை எடுத்து நடத்தி வரும் அரசு வழக்கறிஞர் அனில்குமார் சில நாட்களுக்கு முன் ராஜினாமா செய்தார். இந்த வழக்கில் இருந்து வெளியே வரும் இரண்டாவது வழக்கறிஞர் அனில்குமார். ஏற்கெனவே நவம்பர் 2020-ல் மற்றொரு வழக்கறிஞர் ராஜினாமா செய்தார்.

அதேபோல், திலீப்பின் நண்பரான பாலச்சந்திர குமார் என்பவர் சில நாட்கள் முன் தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் திலீப் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ''பல்சர் சுனியை திலீப்புக்கு ஏற்கெனவே தெரியும். பலமுறை இருவரும் திலீப் வீட்டில் வைத்துச் சந்தித்துள்ளனர். மேலும் நடிகை பாலியல் துன்புறுத்தல் வீடியோ நகல் ஒன்று திலீப்பிடம் உள்ளது. இந்த வீடியோவை திலீப் தனது நண்பர்களுடன் அமர்ந்து பார்த்ததை நான் கண்டுள்ளேன். தற்போது இந்த வழக்கின் முக்கிய சாட்சியான சாகர் வின்சென்ட் என்பவர் மூலமாக இந்த வழக்கில் இருந்து திலீப் தப்பிக்க முயல்கிறார்" என்று பாலச்சந்திர குமார் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

இதுவரை அமைதி காத்து வந்த பாதிக்கப்பட்ட நடிகை, பாலச்சந்திர குமாரின் குற்றச்சாட்டுக்குப் பிறகு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு வழக்குத் தொடர்பாகக் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் இந்த வழக்கின் சமீபத்திய நிகழ்வுகள் குறித்து வேதனை தெரிவித்த நடிகை, ''பாதிக்கப்பட்ட எனக்கு நீதி கிடைக்க வேண்டும். வழக்கறிஞர்கள் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளும் சம்பவம் வழக்கு தவறான பாதைக்குச் செல்வதை உணர்த்துகிறது.

அரசு வழக்கறிஞர்கள் பொதுமக்களுக்கு நீதி கிடைக்கவே அரசுகளால் நியமிக்கப்படுகிறார்கள். ஆனால், என் வழக்கில் நடக்கும் சம்பவங்கள், நிலைமை ஆபத்தை நோக்கிச் செல்வதைப் புலப்படுத்துகிறது. எனவே திறமையான வழக்கறிஞர்களை நியமித்து நீதி கிடைக்க முதல்வர் வழி செய்திட வேண்டும். மேலும், திலீப் மீது பாலச்சந்திர குமார் என்ற நபர் எழுப்பிய குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும்" என்று கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனிடையே, நடிகர் திலீப் தற்போது 'இந்த வழக்கை மேலும் விசாரிக்க வேண்டாம்' என்று கேரள காவல்துறை தலைமை இயக்குநருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x