Published : 04 Jan 2022 01:46 PM
Last Updated : 04 Jan 2022 01:46 PM

டிக் டாக் செய்யும் பெண்களைப் பிடித்து உள்ளே தள்ள வேண்டும்: இயக்குநர் பேரரசு சர்ச்சைப் பேச்சு

டிக் டாக் செய்யும் பெண்களைப் பிடித்து உள்ளே தள்ளவேண்டும் என்று இயக்குநர் பேரரசு பேசியுள்ளார். இப்பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வரதராஜ் இயக்கியிருக்கும் படம் ‘பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே’. இப்படத்தின் இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் பேரரசு கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியவதாவது:

''இந்தப் படம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பற்றிப் பேசுகிறது. அதற்கு எதிராகப் பேசுகிறது என்று சொன்னார்கள். சிலரது செயல்பாடுகளைப் பார்க்கும்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆண்களால் மட்டுமல்ல பெண்களாலும்தான் ஏற்படுகிறது என்று சொல்லத் தோன்றுகிறது. டிக் டாக் செயலியால் நாட்டில் நடக்கும் கொடுமை தாங்க முடியவில்லை. சில கேவலமான பெண்கள் நடந்து கொள்ளும் விதமும் பேசுகிற பேச்சும் சகிக்க முடியவில்லை. குறிப்பாக இரண்டு பெண்கள் செய்யும் செயல்பாடுகள் மிகவும் அருவருப்பானவை. பார்க்க சகிக்க முடியவில்லை. அவர்களை எல்லாம் பிடித்து உள்ளே தள்ளவேண்டும். அந்த அளவிற்கு அவர்களது செயல்பாடுகள் இருக்கின்றன. இவர்களை விட்டு வைக்கக் கூடாது. ஜெயிலில் தள்ள வேண்டும்.

நாட்டில் நடக்கும் பல கலாச்சாரச் சீர்கேடுகளுக்குக் காரணம் செல்போன்கள்தான். தங்கள் பிள்ளைகளிடம் செல்போன் கொடுப்பதைப் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். இதைப் பெற்றோர்கள் புரிந்துகொண்டு கவனமாக வேண்டும். நம் சுதந்திரம் இப்படி மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது. அளவற்ற சுதந்திரம்தான் நாட்டைக் கெடுக்கிறது. செல்போனில் ஃபுல் டாக்டைம் என்பதை ஒழித்துக்கட்ட வேண்டும். அளவில்லாமல் பேசும் வாய்ப்புதான் அத்தனை தவறுகளுக்கும் வழிவகுக்கிறது.

நாடு இப்படிப் போய்க்கொண்டிருக்கும்போது நாம் எத்தனை படம் எடுத்தாலும் இவர்கள் திருந்தப் போவதில்லை. பெண்கள் விஷயத்தில் யார் தப்பு செய்தாலும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். வாத்தியாராக இருந்தாலும் சரி, மதகுருமார்களாக, சாமியார்களாக, அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, சரியான தண்டனை கொடுக்க வேண்டும்.

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஒரு நாள் செய்தியாகக் கடந்து போய் விடுகின்றன. பொள்ளாச்சி என்னாச்சு? இப்போது யார் அதைப் பற்றிப் பேசுகிறார்கள்? எல்லாம் செய்தியாகக் கடந்து போய்விடுகின்றன''.

இவ்வாறு பேரரசு தெரிவித்தார்.

டிக் டாக் தடை செய்யப்பட்டு பல மாதங்கள் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x