Last Updated : 23 Dec, 2021 05:30 PM

 

Published : 23 Dec 2021 05:30 PM
Last Updated : 23 Dec 2021 05:30 PM

முதல் பார்வை: ராக்கி - உலகத் தரத்தில் ரத்தக் களறி சினிமா

ட்ரெய்லர் கொடுத்த ‘ஹைப்’, அட்டகாசமான ஒளிப்பதிவு மற்றும் லைட்டிங், ரத்தம் தெறிக்கும் வன்முறை என தீவிர சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்த ‘ராக்கி’ அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா?

இலங்கைப் போரில் உயிர்பிழைத்து தமிழ்நாட்டுக்கு வருகின்றனர் ராக்கியின் (வசந்த் ரவி) பெற்றோர். தமிழ்நாட்டில் உயிர்பிழைக்க வேண்டி கேங்க்ஸ்டரான மணிமாறனுடன் (பாரதிராஜா) சேர்ந்து ரவுடித் தனங்கள் செய்கிறார் ரவியின் தந்தை. தந்தை இறந்த பின்பு அவர் செய்துகொண்டிருந்தவை அனைத்தும் ராக்கியிடம் வந்து சேர்கின்றன. மணிமாறனின் மகனுக்கும் ராக்கிக்கும் இடையே ஏற்படும் ஈகோ பிரச்சினையால் மணிமாறனின் மகன் ராக்கியின் அம்மாவை (ரோகிணி) கொல்ல பதிலுக்கு ராக்கி மணிமாறனின் மகனைக் கொல்ல இதனால் மணிமாறனுக்கும் ராக்கிக்கும் இடையே பகை வெடிக்கிறது. இதனைத் தொடர்ந்து ராக்கியின் தங்கை அமுதா (ரவீனா ரவி) காணாமல் போகிறார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து வெளியே வரும் ராக்கி தன் தங்கையைக் கண்டுபிடித்தாரா? மணிமாறனுக்கும் ராக்கிக்கும் இடையிலான பகை தீர்ந்ததா? என்ற கேள்விகளுக்கான பதிலை ‘ராக்கி’ படத்தின் திரைக்கதை சொல்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரத்தம் தெறிக்கத் தெறிக்க ஒரு ‘ரா’வான டீஸரை வெளியிட்டு இணையத்தில் பேசுபொருளாகி, ரசிகர்களைக் காக்க வைத்த படம் ஒருவழியாக இன்று வெளியாகியுள்ளது. டீஸர் மற்றும் ட்ரெய்லர் கட்டியம் கூறிய ரத்தம் தெறிக்கும் காட்சிகளும், வன்முறையும் படம் முழுக்க இருக்கின்றன. ஹாலிவுட்டிலும், உலக சினிமாக்களிலும் மட்டுமே பார்த்த இப்படியான காட்சிகள் தமிழுக்குப் புதுசு. பல காட்சிகளில் நம்மையே அறியாமல் கண்கள் மூடிக் கொள்கின்றன. நிச்சயமாக இப்படம் இளகிய மனம் படைத்தோருக்கானதல்ல. ஒரு காட்சியில் எதிராளியின் குடலை உருவி (உண்மையாகவே) அவருக்கே மாலையாகப் போட்டு விடுகிறார் நாயகன். சுத்தியலை எடுத்து கன்னத்தில் சொருகுவது, துருப்பிடித்த கத்தியால் கரகரவென்று கழுத்தை அறுப்பது எனக் காட்சிக்குக் காட்சி ரத்தக் களறியாக இருக்கிறது.

படத்தின் ட்ரெய்லரில் சொல்லப்பட்டது போல ‘குட் & ஈவில்’ பாணி கதை தான். ஒரு கேங்க்ஸ்டர். அவருக்குக் கீழே சில அடியாட்கள். அடியாட்களில் ஒருவருக்கு கேங்ஸ்டரோடு ஏற்படும் ஈகோ பிரச்சினை. இது வழக்கமாக தமிழ் சினிமா தொடங்கி உலக சினிமா வரை பார்த்து சலித்த கதைதான் எனினும் அதை எந்தவித 'ரா'வாகச் சொன்ன விதத்தில் அருண் மாதேஸ்வரன் ஜெயிக்கிறார். படம் தொடங்கியது முதல் இறுதி வரை ஒரு தேர்ந்த நாவலைப் போல திரைக்கதையிலிருந்து விலகாமல் ஒரே நேர்க்கோட்டிலேயே பயணிக்கிறது. படத்துக்குத் தொடர்பில்லாத எந்த ஒரு காட்சியும் இல்லை, எந்தக் கதாபாத்திரமும் இல்லை. திரைக்கதையின் ஓட்டத்துக்கு நான் லீனியர் கதை சொல்லல் பெரிதும் உதவியிருக்கிறது.

ராக்கியான வசந்த் ரவி. படத்தில் பெரிய அளவில் உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகள் இல்லையென்றாலும் அவரது ஆஜானுபாகுவான தோற்றம் வன்முறைக் காட்சிகளுக்கு நம்பத்தன்மையூட்டுகின்றன. ஆனால், வாய் திறந்து பேசும்போது மட்டும் அடியாள் பேசுவது போலல்லாமல் சாஃப்ட்வேர் கம்பெனி ஊழியர் போல இருக்கிறது. ‘தரமணி’ ஏற்படுத்திய பாதிப்பாக இருக்கலாம்.

மணிமாறனாக பாரதிராஜா. படத்தின் இரண்டாவது ஹீரோ என்று சொல்லும் அளவுக்குப் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். அடியாட்களை அலட்சியமாக கையாள்வதாகட்டும், தனது மகனைக் கண்முன்னே எதிரி ஒருவன் குத்திக் குதறுகையில் கதறித் துடிப்பதாகட்டும் காட்சிக்குக் காட்சி அப்ளாஸ் அள்ளுகிறார். படத்தில் மொத்தமே விரல் விட்டு எண்ணக்கூடிய கதாபாத்திரங்கள்தான் என்றாலும் அனைவருமே குறை சொல்லமுடியாத நடிப்பை வழங்கியுள்ளனர்.

படத்தின் இன்னொரு ஹீரோ என்று ஒளிப்பதிவாளர் ஷ்ரீயாஸ் கிருஷ்ணாவை தாராளமாகச் சொல்லலாம். அந்த அளவுக்கு ஒவ்வொரு காட்சியும் ஒரு ஓவியம் போல மிளிர்கிறது. குறிப்பாக அந்த காரிடார் சண்டைக் காட்சியில் ஒளிப்பதிவு மற்றும் லைட்டிங் உலகத் தரம். ஏற்கெனவே ட்ரெய்லர் பார்வையில் இந்தக் காட்சி கொரியப் படமான ‘ஓல்டு பாய்’ படத்தின் பிரபலமான கோடாரி சண்டையை நினைவுபடுத்துவதாகக் குறிப்பிட்டிருந்தோம். அது படத்திலும் சிறப்பாக வந்திருக்கிறது. பெரிய திரையில் பார்க்க வேண்டிய காட்சி அது. தர்புகா சிவாவின் இசை திரைக்கதையின் ‘இருண்ட’ மனநிலைக்கு ஏற்ப பார்வையாளர்களைத் தயார்படுத்துகிறது.

படத்தில் ஆங்காங்கே வரும் ‘கொட்டை எடுத்த பழம்’ குறியீட்டுக்குப் படத்தின் இறுதியில் வைக்கப்பட்ட காட்சி அருமை. அதே போல க்ளைமாக்ஸ் காட்சியில் பார்வையாளர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் உறுதி.

படத்தில் குறைகளும் இல்லாமல் இல்லை. முதல் பாதியில் பல நீளமான காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றன. குறிப்பாக தங்கையைத் தேடி ஒரு வீட்டுக்குச் செல்லும் நாயகன் நடக்கிறார், நடக்கிறார், நடந்து கொண்டே இருக்கிறார். அவர் நடக்கும் அந்த தூர இடைவெளியிலேயே இரண்டு முறை பார்வையாளர்கள் கண்ணசந்து விடுவார்கள். இதுபோல கொட்டாவி வரவைக்கும் நீ.....ளக் காட்சிகள் ஆங்காங்கே இருக்கவும் செய்கின்றன. இன்னொன்று அதீத வன்முறை. உலக சினிமா ரசிகர்களுக்கு வேண்டுமானால் இதுபோன்ற காட்சிகள் பரிச்சயமாக இருக்கலாம். ஆனால், வெகுஜன ரசிகர்கள் இவ்வளவு வன்முறையை ரசிப்பார்களா என்பது சந்தேகமே. எனினும் வன்முறைக் காட்சிகள் பெரும்பாலும் கருப்பு வெள்ளையாக வருவது ஆறுதல்.

வழக்கமான ஒரு கதையைக் கையிலெடுத்து அதை எந்தவித க்ளிஷேவும் இன்றி புதுமையாகவும், ‘ரா’வாகவும் சொல்லிய விதத்தில் ஜெயிக்கிறது ‘ராக்கி’.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x