Published : 18 Dec 2021 03:09 PM
Last Updated : 18 Dec 2021 03:09 PM

‘ஊ சொல்றியா’ பாடல் சர்ச்சை: பாடலாசிரியர் விவேகா விளக்கம்

‘ஊ சொல்றியா’ பாடல் சர்ச்சையான நிலையில், இதுகுறித்துப் பாடலாசிரியர் விவேகா பேட்டி அளித்துள்ளார்.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் அல்லு அர்ஜுனுடன் நடித்துள்ளார்கள். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நேற்று (டிச 17) வெளியானது.

இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படம் வெளியாவதற்கு முன்பு இதில் இடம்பெற்றுள்ள ‘ஊ சொல்றியா’ என்ற பாடலைப் படக்குழு யூடியூபில் வெளியிட்டது. இந்தப் பாடலை விவேகா எழுத, ஆண்ட்ரியா பாடியுள்ளார். இந்தப் பாடலுக்கு சமந்தா நடனமாடியுள்ளார். இப்பாடலின் வரிகளுக்கு எதிராகவும், ஆதரவாகவும் இணையத்தில் கடும் விவாதம் கிளம்பியது. ஆண்கள் அமைப்பு ஒன்று ஆந்திர உயர் நீதிமன்றத்தில் இப்பாடலைத் தடை செய்ய வேண்டும் என வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் 'இந்து தமிழ் திசை' யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இப்பாடலின் பின்னணி குறித்துப் பாடலாசிரியர் விவேகா பேசியுள்ளார்.

அப்பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

''இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு ஆண்கள், பெண்கள் இருவருமே எனக்குத் தனிப்பட்ட முறையில் பாராட்டு தெரிவித்தனர். இதுவரை யாரும் என்னிடம் கண்டனமோ, எதிர்ப்போ தெரிவிக்கவில்லை. இந்தப் பாடல் ஆண்கள் சமூகத்தை அவமதிப்பதாக சிலர் சொல்கிறார்கள். ஆண்கள் கையில்தானே உலகமே இருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆண்தானே ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அனைத்துத் துறையிலிருந்தும் நிறைய பெண்கள் இந்தப் பாடலைப் பாராட்டியிருக்கிறார்கள்.

இந்தப் பாடலை எழுத முக்கால் மணி நேரம் எடுத்துக் கொண்டேன். பாடல் வெளியாகும் கடைசி நேரம் வரை இவ்வளவு சர்ச்சை எழும் என்று எனக்குத் தெரியாது. பொதுவாக ஒரு ஆணின் மனோபாவம் எப்படி இருக்கும் என்று கேளிக்கை விடுதியில் நடனமாடும் ஒரு பெண் வகைப்படுத்துகிறாள் என்றுதான் இப்பாடலை நாம் அணுகவேண்டும். பாடல் உருவாக்கத்தின் போதே தேவிஸ்ரீ பிரசாத் உட்பட எங்கள் அனைவருக்குமே பாடல் மிகவும் பிடித்திருந்தது. பாடல் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பது முன்பே நாங்கள் எதிர்பார்த்ததுதான். ஆனால், சர்ச்சை நாங்கள் எதிர்பார்க்காதது.

நிர்பயா வழக்கில் குற்றம் செய்தவனும் ஆண்தான். இங்கு நடக்கும் பாலியல் வழக்குகளில் சிக்குபவனும் ஆண் தான். எனவே இந்தப் பாடலில் நான் எல்லா ஆண்களையும் குறிப்பிடவில்லை. அதை மட்டும் நான் உறுதியாக சொல்லிக் கொள்கிறேன்''.

இவ்வாறு விவேகா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x