

குடும்பத்தினருடன் தனது 71-வது பிறந்தநாளை நடிகர் ரஜினிகாந்த் நேற்று கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன.
தமிழ் திரைவானின் சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடப்படும் ரஜினிகாந்த் 1975-ல் முதன்முதலாக தமிழில் நடிக்கத் தொடங்கி கடந்த 45 ஆண்டுகளாக ரசிகர்களின் ஏகோபித்த அன்பைப் பெற்றுவந்துள்ளார். பலகட்டங்களில் அவரது அரசியல் பிரவேசம் பெரிய எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தியபோதிலும் அவர் அரசியல் பிரவேசத்தில் ஈடுபடாமலேயே உள்ளார். இந்தாண்டு அவருக்கு மத்திய அரசு திரைத்துறையின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்கி கவுரவித்தது.
ரஜினிகாந்த் நேற்று தனது 71-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரது பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, விளையாட்டு வீரர்கள் ஹர்பஜன் சிங், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
நேற்று போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினி வீட்டின்முன் ரசிகர்கள் திரண்டிருந்தனர். காலையிலிருந்தே அங்கு கூடியிருந்த ரசிர்கள் தலைவா, சூப்பர் ஸ்டார் வாழ்க என கோஷமிட்டனர். சிலர் ரஜினி வெளியே வந்து வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்களுக்கு கையசைத்து மகிழ்ச்சி தெரிவிப்பார் என எதிர்பார்த்து நேரம் கடந்த நிலையிலும் கலைந்துசெல்லாமல் நீண்டநேரமாக காத்துக்கிடந்தனர்.
இந்நிலையில் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் வீட்டில் கேக்வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இப்படங்களில், ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் மகள்கள் ஐஸ்வர்யா ஆர் தனுஷ் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் ரஜினி கேக் வெட்டுவதைக் காணலாம்.
இந்நிகழ்ச்சியில் ரஜினியின் மருமகன் விசாகன், பேரன்கள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
ரஜினியின் மனைவி லதா, ஒரு புகைப்படத்தில், தனது கணவரிடம் பூங்கொத்து கொடுப்பதைக் காணமுடிகிறது. மற்றொரு படத்தில், ரஜினிகாந்த் தனது மகள் சௌந்தர்யா மற்றும் அவரது கணவர் விசாகனுடன் காணப்படுகிறார்.
நேற்று அவரது போயஸ் தோட்ட இல்லமும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இப்படங்களில் அவரது வீட்டின் உள்ளே வண்ண சில்வர் காகிதங்கள், சிவப்பு பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்ததையும் காணமுடிந்தது.