Published : 11 Dec 2021 11:24 AM
Last Updated : 11 Dec 2021 11:24 AM

முதல் பார்வை: 3:33

தன் தாய் மற்றும் சகோதரியுடன் ஒரு புதிய வீட்டுக்குக் குடிவருகிறார் கதிர் (சாண்டி). குடியேறிய முதல் நாளிலிருந்தே அந்த வீட்டில் ஏதோ ஒரு வித்தியாசமான அதிர்வலை இருப்பதைத் தெரிந்து கொள்கிறார். தொடர்ந்து சில கெட்ட கனவுகளும் அவருக்கு வருகின்றன. அதிகாலை 3:33 மணிக்குப் பிறந்ததால் அவருக்கு அந்த வீட்டில் சரியாக அதிகாலை 3:33 மணிக்கு இவை நடக்கின்றன. மறுநாள் அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பி மீண்டும் வேறு மாதிரியான அசம்பாவிதங்கள் நடக்கின்றன. ஆனால், இவை எதுவும் சாண்டியைத் தவிர வேறு யாருக்கும் தெரியவில்லை. இவையே மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கின்றன. இவை எதனால் நடக்கின்றன? இதிலிருந்து சாண்டியால் மீள முடிந்ததா என்பதே ‘3:33’ படத்தின் திரைக்கதை.

நடன இயக்குநர் சாண்டிக்கு நாயகனாக முதல் படம். தன்னால் முடிந்த அளவு சிரமப்பட்டு நடிக்க முயன்றுள்ளார். படம் முழுக்க சிரிக்கவே சிரிக்காத சீரியஸான கதாபாத்திரம் என்பதால் அதற்கேற்ப கோபமான காட்சிகளிலும், பயப்படும் காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார். ஆனால், எமோஷனலான காட்சிகளிலும், அழுகைக் காட்சிகளிலும் முகத்தில் உணர்வுகளைக் கொண்டு வருவதில் சிரமப்படுவது தெரிகிறது.

சாண்டியின் அக்காவாக வரும் ரேஷ்மா, தாயாக வரும் ரமா, காதலியாக வரும் ஷ்ருதி செல்வம் ஆகியோர் படத்துக்குத் தேவையான நடிப்பைக் கொடுத்துள்ளனர். படத்தின் இறுதியில் வரும் கௌதம் மேனன் ஒரு ஸ்டைலிஷ் பேயோட்டியாக வந்து தனது வழக்கமான ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுகிறார்.

ஒரு புதிய வீடு, அங்கே நடக்கும் மர்ம சம்பவங்கள் என ஒரு சைக்காலாஜிக்கல் த்ரில்லராகத் தொடங்கும் படம், அடுத்தடுத்த காட்சிகளிலேயே எங்கு செல்வதெனத் தெரியாமல் தடுமாறத் தொடங்கி விடுகிறது. மீண்டும் மீண்டும் நாள் ரிப்பீட் ஆவதால் இது டைம் லூப் படமா, அல்லது பேய்ப் படமா, அல்லது சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமா எனப் பல கேள்விகள் எழுகின்றன. ஆனால், எந்தக் கேள்விக்கும் படத்தில் தெளிவான பதில் இல்லை. படத்தில் அடிக்கடி பேய் போன்ற ஒரு உருவத்தைக் காட்டுகிறார்கள். அதன் பின்னணி என்ன? அதன் நோக்கம் என்ன? அது ஏன் அந்த வீட்டில் இருப்பவர்களை பயமுறுத்துகிறது. அல்லது அந்த புதிய வீட்டில் பிரச்சினையா? இல்லை சாண்டி 3:33 மணிக்குப் பிறந்ததுதான் பிரச்சினையா? அப்படியென்றால் ஏன் இந்த வீட்டுக்கு வருவதற்கு முன்பு அவருக்கு எதுவும் நடக்கவில்லை, இப்படி எதற்குமே தெளிவான விளக்கம் இல்லை.

அசாம்பாவிதங்கள் நடப்பது, மீண்டும் சாண்டி கண்விழிப்பது, மீண்டும் வேறு சம்பவங்கள் நடப்பது, மீண்டும் கண்விழிப்பது என ஒரே மாதிரியான காட்சிகள் மீண்டும் மீண்டும் வருவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. படத்தில் ஓரிரு காட்சிகள் பயமுறுத்துகின்றன. உதாரணமாக பேயைக் கண்ணாடியில் காட்டுவது. ஆனால், இதுபோன்ற சில காட்சிகளைத் தவிர படத்தில் வரும் காட்சிகள் பார்வையாளர்களுக்கு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. திகில் காட்சிகளில் எல்லாம் கொல்லென்று சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் சாண்டியின் அக்காவும் தாயும் முகத்தில் மைதா மாவு போன்ற மேக்கப்பைப் பூசிக்கொண்டு வந்து பயமுறுத்துவதெல்லாம் ‘ஜெகன் மோகினி’ டைப் காமெடிப் பேயை நினைவூட்டின.

படத்தில் மூன்றாம் எண்ணுக்கும் மத நம்பிக்கைக்கும் தொடர்பு இருப்பதாக கௌதம் மேனன் சொல்லும் கதை எல்லாம் கம்பி கட்டும் ரகம். முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சு போடும் முயற்சி. திரைக்கதையில் எந்தவித சுவாரஸ்யத்தையும் கொடுக்காமல், பின்னணியைத் தெளிவாகச் சொல்லாமல் இதுபோன்ற கதைகளைச் சொல்வதன் மூலம் ஆடியன்ஸை நம்பவைத்து விடலாம் என்று இயக்குநர் நம்பிக்கை சந்துரு எண்ணியிருப்பார் போலும். அதேபோல க்ளைமாக்ஸுக்குப் பிறகு கௌதம் மேனன் பேயுடன் பேசுவது செம காமெடி. ஏதோ செல்போனில் பேசுவதுபோல “நான் பேசுறது கேட்குதா? நீங்க பேசுறது எனக்குத் தெளிவா கேட்கல” என்கிறார். “சிக்னல் கிடைக்கவில்லை போல... வெளில போய் பேசுங்க” என்று பார்வையாளர்களில் ஒருவர் சொன்னது காதில் விழுந்தது.

சதீஷ் மனோகரனின் ஒளிப்பதிவும், ஹர்ஷவர்தனின் இசையும் படத்துக்கும் பெரிய ப்ளஸ். ஒரு திகில் படத்துக்கான மனநிலைக்குப் பார்வையாளர்களைத் தொடக்கத்திலேயே தயார் செய்வதில் இவை இரண்டும் பெரும் பங்கு வகிக்கின்றன. பாடல்கள் எதுவும் இல்லாதது பெரும் ஆறுதல்.

படத்தில் எந்தக் காட்சியிலும் பயப்படாத பார்வையாளர்களை இறுதியில் ‘To Be Continued..' என்று வரும்போது பயந்து அலற வைக்கிறது இந்த ‘3:33’.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x