வெறியோடு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறீர்கள்: ரசிகர்களுக்கு சிம்பு நன்றி

வெறியோடு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறீர்கள்: ரசிகர்களுக்கு சிம்பு நன்றி
Updated on
1 min read

‘மாநாடு’ படக்குழு மற்றும் ரசிகர்களுக்கு நடிகர் சிம்பு நன்றி தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மாநாடு'. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவிருந்து பின்னர் நவ.25ஆம் தேதி வெளியானது. படம் வெளியானது முதலே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் சிம்பு, வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவுக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ‘மாநாடு’ படக்குழு மற்றும் ரசிகர்களுக்கு நடிகர் சிம்பு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

''இறைவன் மீதும் உழைப்பின் மீதும் நம்பிக்கை வைத்து மிக அழகாக உழைத்த படம் 'மாநாடு'.

எப்படியாவது என்னை நேசிப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்திவிட வேண்டும் என்ற என் எண்ணத்திற்கு ஏற்ற பலன் கிடைத்துள்ளது.

‘மாநாடு’ படம் உலகம் முழுக்க மிகப் பெரும் வெற்றியை அள்ளியெடுத்துள்ளது.

இதற்குக் காரணமான என் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, அற்புதமான இயக்கத்தைத் தந்த வெங்கட் பிரபு, அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள், 'மாநாடு' படக்குழு, என் தாய், தந்தை, வெளியிட்ட விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், நண்பர்கள், பத்திரிகை நண்பர்கள், என் ரத்தமான அன்பு ரசிகர்களுக்கும், உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் மிகப் பெரிய நன்றிக் கடன்பட்டுள்ளேன்.

நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் என் அத்தனை உணர்வுகளையும் அடக்கிவிட முடியாது.

ஆனால், பதிலுக்குத் தெரிவிக்க வேறு வார்த்தைகள் இல்லையே...

ஆடியோ விழாவில் நான் சிந்திய சிறு துளிகளைத் தரையில் விழவிடாமல் தாங்கிக்கொண்ட உங்கள் அன்பிற்குள் நான் அடங்கி மகிழ்கிறேன்.

வெறியோடு உலகம் முழுக்க வெற்றியைத் தேடித் தந்திருக்கிறீர்கள்.

அனைவருக்கும் வணக்கங்களும், வாழ்த்துகளும்!''

இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in