

திரையரங்குகளுக்குள் நுழைய தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு ‘மாநாடு’ தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கண்டனம் தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாநாடு'. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். தீபாவளிக்கு வெளியாகவிருந்த இந்தப் படம் தற்போது நவம்பர் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் சமீபத்தில் திரையரங்குகள், மார்க்கெட், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட பொது இடங்களுக்குள் நுழைய கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி என்ற புதிய விதிமுறையைத் தமிழக சுகாதாரத் துறை அமல்படுத்தியது. இதனடிப்படையில் திரையரங்குகளுக்குச் செல்வோர் கரோனா தடுப்பூசி சான்றிதழைக் காட்டிய பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ''உலகத்திலேயே திரையரங்கிற்குச் செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல் முறை. அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும்'' என்று சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.