

‘ஜெய் பீம்’ படத்தின் மலையாள டப்பிங்குக்காக சூர்யாவுக்கு நடிகர் நரேன் குரல் கொடுத்துள்ளார்.
த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தனர். இப்படம் தெலுங்கு மற்றும் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது இப்படத்தை மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மலையாளத்தில் சூர்யாவுக்கு நடிகர் நரேன் குரல் கொடுத்துள்ளார்.
இது குறித்து நரேன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
'மிகப் பெரிய நடிகரான சூர்யாவுக்குக் குரல் கொடுப்பதில் பெருமிதம் அடைகிறேன். பெரும் வெற்றி பெற்ற 'சூரரைப் போற்று' படத்துக்கும் நான்தான் டப்பிங் பேசினேன்.
'ஜெய்பீம்' படத்துக்கும் டப்பிங் பேச அழைத்தபோது ஒப்புக்கொண்டேன். ஆனால், நான் நினைத்த மாதிரி இல்லாமல் மிகவும் சவால் நிறைந்ததாக இருந்தது. சூர்யா சாரின் நடிப்பு, வசன உச்சரிப்பு மிக நுட்பமாக இருந்ததால் காட்சிக்குக் காட்சி கவனித்து பேசியது புது அனுபவமாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. அதுமட்டுமல்ல, இந்த அனுபவம் சினிமாவை மேலும் கற்றுக்கொள்ள உதவியாக இருந்தது. மலையாளத்தில் படத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. வாய்ப்பு அளித்த சிபு பற்றும் ஜாலி ஆகியோருக்கு நன்றி. ஜெய் பீம்!''
இவ்வாறு நரேன் கூறியுள்ளார்.