Published : 16 Nov 2021 04:41 PM
Last Updated : 16 Nov 2021 04:41 PM
விருதுகள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை எனத் திரைப்படப் பாடலாசிரியர் மதன் கார்க்கி கூறினார்.
மதுரை குயின் மீரா சர்வதேசப் பள்ளியில் மாணவர் கீதத்தை திரைப்படப் பாடலாசிரியர் மதன் கார்க்கி வெளியிட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
’’குழந்தைகளாக இருக்கும்வரை இந்த உலகம் அழகாக இருக்கும். எவ்வளவு வளர்ந்தாலும், என்ன செய்துகொண்டு இருந்தாலும் நமக்குள் இருக்கிற குழந்தைப் பருவம் அப்படியே இருக்க வேண்டும். குழந்தையாக இருக்கும்போது உலகத்தை ஆச்சரியத்துடன், வியப்புடன் பார்ப்போம்.
குழந்தைகளுடனும், வயதானவர்களுடனும் டிரெக்கிங் போய்ப் பாருங்கள். வயதானவர்கள் சோகத்தை மட்டுமே பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனால், குழந்தைகள் அப்படியில்லை. அவர்களின் உலகம் தனியானது. இந்தக் குழந்தைப் பருவத்தைத்தான் பருவ வயதை அடையும்போது தொலைத்துவிடுகிறோம். குழந்தைப் பருவத்தை எப்போதும் தொலைக்கக் கூடாது.
எனக்கு விருதுகள் மீது நம்பிக்கையில்லை. எந்த விருதாக இருந்தாலும் சிலர் மட்டுமே முடிவெடுக்கின்றனர். பாடல்கள், இசை எதுவாக இருந்தாலும் அதற்கான விருது அனைவரையும் சென்றடைய வேண்டும்.
அப்பா, கவிஞர் வைரமுத்துவின் பாடல்களைப் பார்த்துதான் வளர்ந்தேன். அவர் வரிகளை வைத்துதான் தமிழ் இலக்கியம், எதுகை, மோனை, உவமை, சந்தம் பயன்படுத்துவதைத் தெரிந்துகொண்டேன். அவர் பாடல்களிலிருந்துதான் அனைத்தையும் கற்றுக்கொண்டேன்’’.
இவ்வாறு மதன் கார்க்கி பேசினார்.
நிகழ்ச்சியில் பள்ளித் தலைவர் டாக்டர் சி.சந்திரன், நிர்வாக இயக்குநர் அபிநாத் சந்திரன், கல்வி இயக்குநர் சுஜாதா குப்தன், பியானோ கலைஞர் அனில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT