Published : 11 Nov 2021 08:07 PM
Last Updated : 11 Nov 2021 08:07 PM

விளம்பரத்துக்காக யாரையும் அவமதிக்க வேண்டிய தேவை எனக்கில்லை - அன்புமணியின் கேள்விகளுக்கு சூர்யா பதில்

அன்புமணியின் கேள்விகளுக்கு நடிகர் சூர்யா பதிலளித்துள்ளார்.

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமான காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாக கூறி அது தொடர்பான அறிக்கை ஒன்றை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்டார்.

இந்நிலையில் அன்புமணியின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக சூர்யா இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கையின் மூலம் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

மதிப்புக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு. அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு,

வணக்கம், தங்கள் கடிதத்தை சமூக ஊடகங்களின் வாயிலாக படித்தேன். என் மீதும் என் குடும்பத்தார் மீதும் நீங்கள் காட்டிய அன்பிற்கு நன்றி.

நீதிநாயகம் சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய ஒரு வழக்கில், ‘அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது’ என்பதே ஜெய்பீம் படத்தின் மையக்கரு. பழங்குடியின மக்கள் நடைமுறையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் படத்தில் பேச முயற்சித்திருக்கிறோம்.

கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் எனக்கோ, படகுழுவினருக்கோ இல்லை. சிலர் சுட்டிக்காட்டிய பிழையும், உடனடியாக திருத்தி சரி செய்யப்பட்டதைத் தாங்கள் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்.

‘படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் எந்தவொரு சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை’ என்கிற தங்களின் கருத்தை முழுவதுமாய் நன ஏற்கிறேன். அதே போல ‘படைப்பு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும்’ என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஒரு திரைப்படம் என்பது ஆவணப்படம் அல்ல. ‘இத்திரைப்படத்தின் கதை, உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. இதில் வரும் கதாபாத்திரங்கள், பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் யாரையும் தனிப்பட்ட அளவில் குறிப்பிடப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்கிற படத்தின் தொடக்கத்திலேயே பதிவு செய்துள்ளோம்.

எளிய மக்களின் நலன் மீது அக்கறையில்லாத யாருடைய கையில் அதிகாரம் கிடைத்தாலும், அவர்கள் ஒரே மாதிரி தான் நடந்து கொள்கிறார்கள். அதில் சாதி, மத, மொழி, இன பேதம் இல்லை. உலகம் முழுவதும் இதற்குச் சான்றுகள் உண்டு. படத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை, குறிப்பிட்ட ‘பெயர் அரசியலுக்குள்’ சுருக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஒருவரைக் குறிப்பிடுவதாக நீங்கள் சொல்லும் அந்தக் கதாபாத்திரத்தின் பெயர், வேறொருவரையும் குறிப்பதாக ஒரு பத்திரிகையாளர் குறிப்பிடுகிறார். எதிர்மறைக் கதாபாத்திரங்களுக்கு எந்தப் பெயர் வைத்தாலும் அதில் யாரேனும் மறைமுகமாக குறிப்பிடப்படுவதாக கருதப்படுமேயானால், அதற்கு முடிவே இல்லை. அநீதிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய போராட்டக் குரல் ‘பெயர் அரசியலால்’ மடைமாற்றம் செய்யப்பட்டு நீர்த்துப் போகிறது.

சக மனிதர்கள் வாழ்வு மேம்பட என்னால் முடிந்த பங்களிப்பை தொடர்ந்து செய்கிறேன். நாடு முழுவதும் எல்லா தரப்பு மக்களின் பேரன்பும், பேராதரவும் எனக்கு இருக்கிறது. விளம்பரத்துக்காக யாரையும் அவமதிக்க வேண்டிய எண்ணமோ, தேவையோ எனக்கு இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சமத்துவமும், சகோதரத்துவமும் பெருக நாம் அனைவரும் அவரவர் வழியில் தொடர்ந்து செயல்படுவோ. தங்கள் புரிதலுக்கு நன்றி.

அன்புடன்
சூர்யா

இவ்வாறு சூர்யா கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x