Published : 08 Nov 2021 12:44 PM
Last Updated : 08 Nov 2021 12:44 PM

 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' இறுதி பாகம்: ராக் ஜான்சனுக்கு வின் டீசல் அழைப்பு

'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' இறுதி பாகத்தில் நடிக்க ராக் ஜான்சனுக்கு வின் டீசல் அழைப்பு விடுத்துள்ளார்.

ஹாலிவுட்டின் பிரபலமான திரை வரிசைகளில் ஒன்று 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்'. இதன் கார் துரத்தல் மற்றும் சண்டைக் காட்சிகளைப் பெரிய திரையில் பார்ப்பதற்கென்றே உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் 9ஆம் பாகம், இதுவரை 591.3 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து ஹிட்டடித்துள்ளது.

ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸின் 6-வது பாகத்தில் ‘தி ராக்’ ட்வைன் ஜான்சனின் 'ஹாப்ஸ்' கதாபாத்திரம் அறிமுகமானது. தொடர்ந்து அடுத்த இரண்டு பாகங்களிலும் இந்த ஹாப்ஸ் கதாபாத்திரம் இடம்பெற்று ரசிகர்களிடம் வரவேற்பையும் பெற்றது. இதனால் ஹாப்ஸ் மற்றும் ஷா என்ற இரண்டு கதாபாத்திரங்களை மட்டும் வைத்துத் தனிப்படம் ஒன்றும் வெளியாகி வெற்றி பெற்றது.

படத்தின் நாயகர்களில் ஒருவரும், தயாரிப்பாளர்களில் ஒருவருமான வின் டீஸலுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டால் ராக் ஜான்சன் இனி இந்தத் திரை வரிசையில் நடிக்க மாட்டார் என்று கூறப்பட்டது. அதைப் போலவே சமீபத்தில் வெளியான 9ஆம் பாகத்தில் ஜான்சன் நடிக்கவில்லை.

இந்நிலையில் 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' இறுதி பாகத்தில் நடிக்க ராக் ஜான்சனுக்கு வின் டீசல் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது:

''தம்பி ட்வைன் ஜான்சன்... நேரம் வந்துவிட்டது. ஃபாஸ்ட் படவரிசையின் இறுதிப் படத்துக்கு உலகமே காத்திருக்கிறது. என் வீட்டில் என் குழந்தைகள் உன்னை அங்கிள் ட்வைன் என்று அழைப்பதை நீ அறிவாய். நீயும் அவர்களும் வாழ்த்துகளை அனுப்பாத விடுமுறை நாட்களே கிடையாது. ஆனால், நேரம் வந்துவிட்டது. சகாப்தம் அழைக்கிறது.

பாப்லோவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நான் நிறைவேற்றப் போகிறேன் என்று பல வருடங்களுக்கு முன்பே உன்னிடம் கூறியிருந்தேன். இறுதி பாகத்தில் மிகச் சிறப்பான பங்கை நாம் அளிப்போம் என்று நான் உறுதி அளிக்கிறேன். இது அன்பின் வெளிப்பாடு என்று சொல்வேன். ஆனால், நீ வரவேண்டும். நீ நடிக்க ஒரு முக்கியமான பாத்திரம் இருக்கிறது. இந்தப் படவரிசையை விட்டுச் சென்று விடாதே. ஹாப்ஸ் பாத்திரத்தை வேறு யாராலும் நடிக்க முடியாது. நீ வழக்கத்தை விடச் சிறப்பாக நடித்து, உன்னுடைய சாதனையை அடைவாய் என்று நம்புகிறேன்''.

இவ்வாறு வின் டீசல் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x