இந்திய சர்வதேச திரைப்பட திருவிழாவுக்கு தேர்வான படங்கள் அறிவிப்பு: 2 தமிழ் படங்கள் தேர்வு

இந்திய சர்வதேச திரைப்பட திருவிழாவுக்கு தேர்வான படங்கள் அறிவிப்பு: 2 தமிழ் படங்கள் தேர்வு
Updated on
1 min read

இந்திய சர்வதேச திரைப்பட திருவிழாவுக்கு தேர்வான படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு தமிழ் படங்கள் தேர்வாகியுள்ளன.

கோவாவில் நடைபெற உள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 52-வது பதிப்பில் திரையிடப்படவுள்ள படங்களின் பட்டியல் வெளியிடப்படுள்ளது.

தேர்வான 24 திரைப்படங்களில் பி எஸ் வினோத்ராஜ், இயக்கிய ‘கூழாங்கல்’ இடம்பெற்றுள்ளது. மேலும், கதையில்லா திரைப்படங்கள் பட்டியலில் 20 படங்கள் இடம் பெற்றுள்ள நிலையில், ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கிய ‘ஸ்வீட் பிரியாணி’யும் அவற்றில் ஒன்றாகும்.

இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், கோவா மாநில அரசுடன் இணைந்து, 2021 நவம்பர் 20 முதல் 28 வரை இந்த விழாவை இந்திய திரைப்பட விழா இயக்குநரகம் ஏற்பாடு செய்துள்ளது.

விழாவில் கலந்து கொள்ள பதிவு செய்து கொண்டுள்ள அனைவருக்கும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள படங்களின் பிரதிநிதிகளுக்கும் கோவாவில் 9 நாட்கள் நடைபெறவுள்ள திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் திரையிடப்படும்.

திரைப்படங்களை தேர்வு செய்யும் நடுவர் குழுவுக்கு பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் திரு எஸ் வி ராஜேந்திர சிங் பாபுவும், கதையில்லா திரைப்படங்களை தேர்வு செய்யும் நடுவர் குழுவுக்கு பிரபல ஆவணப் பட இயக்குநர் திரு எஸ் நல்லமுத்துவும் தலைமையேற்றிருந்தனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்களில் முதல் திரைப்படமாக அசாம் மற்றும் நாகலாந்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் பேசும் திமாசா மொழியில் உருவான ‘செம்கோர்’ படம் திரையிடப்படும். கதையில்லா பிரிவில் முதல் திரைப்படமாக ‘வேத்-தி விஷனரி’ எனும் ஆங்கில மொழி படம் திரையிடப்படும் என தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in