பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு: காங்கிரஸ் கட்சியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகர் ஜோஜு ஜார்ஜ்

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு: காங்கிரஸ் கட்சியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகர் ஜோஜு ஜார்ஜ்
Updated on
1 min read

பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு எதிராக போராடிய போராட்டக்காரர்களுடன் நடிகர் ஜோஜு ஜார்ஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி கேரள மாநிலம் கொச்சியில் இன்று (நவ.01) காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொச்சியின் மிகவும் பரபரப்பான பகுதியில் இப்போராட்டம் நடைபெற்றதால் காலை முதல் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். அவர்களில் பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜும் ஒருவர்.

நீண்ட நேரம் டிராபிக்கில் காத்துக் கொண்டிருந்த ஜோஜு ஜார்ஜ் ஒரு கட்டத்தில் பொறுமையிழந்தார். தனது காரிலிருந்து இறங்கிய அவர் நேராக போராட்டம் நடக்கும் இடத்துக்குச் சென்று காங்கிரஸ் கட்சியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து அவரை போலீஸார் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர். இந்த காட்சிகள் தொலைகாட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

பின்னர் செய்தியாளர்களிடம் ஜோஜு ஜார்ஜ் கூறியதாவது:

நான் இங்கே பிரச்சினை செய்ய வரவில்லை. அவசர மருத்துவ காரணங்கள் உட்பட பல்வேறு காரணங்களுக்காக செல்லும் மக்களுக்கு இப்போராட்டம் பெரும் இடையூறாக இருக்கிறது. அரசியல் கட்சிகள் மக்களின் நலனுக்காக பணியாற்ற வேண்டும். அவர்கள் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. பெட்ரோல் விலை உயர்வு ஒரு பிரச்சினை இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் அதற்கு எதிராக போராட இது வழியல்ல. இது போன்ற போராட்டங்களால் பெட்ரோல் டீசல் விலை குறைந்து விடுமா? நமது தலைவர்கள் சற்று முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டாமா?

இவ்வாறு ஜோஜு ஜார்ஜ் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in